இந்தியா 2050

October 30, 2004 at 12:28 pm | Posted in வகைப்படுத்தாதவை... | 2 Comments

இந்தியா 2025 ஐ எழுதி விட்டு, இது சாத்தியம் தானா இல்லை ஒரு நிறுவனத்தின் கற்பனையா என்ற ஐயத்துடன் Goldmansachs இணையத்தளத்துக்கு சென்று அந்த அறிக்கையினைப் பார்த்த பொழுது, இது சாத்தியமாவதற்கான வாய்ப்பு ஓரளவு இருப்பதாகவே தோன்றியது.

அப்படி என்னத்தான் சொல்கிறது அந்த அறிக்கை ?

2050ம் ஆண்டு உலகின் முதல் மூன்று பொருளாதார வல்லரசுகள்

  1. சீனா
  2. அமெரிக்கா
  3. இந்தியா

என்ன நம்பமுடியவில்லையா ? எனக்கும் கூட அப்படித்தான் இருந்தது.

Goldmansachs நிறுவனம் அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு நிறுவனம். அதன் BRIC Report என்ற இந்த அறிக்கையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி ஆய்வு செய்து கடந்த ஆண்டு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டின் அறிக்கையை இம் மாதம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் உறுதி செய்துள்ளது.

அந்த அறிக்கையின் சாராம்சம்

  • 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்பொழுதுள்ள பணக்கார நாடுகளான G6 நாடுகளின் (US, UK, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி), பொருளாதாரத்தை விட BRIC நாடுகளின் பொருளாதாரம் அதிகமாக இருக்கும்.
  • 2050ஆம் ஆண்டு உலகின் ஆறு பெரிய பொருளாதார வல்லரசுகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா, ஜப்பான் தவிர மற்ற G6 நாடுகள் காணாமல் போய்விடும்.
  • 2050 ஆம் ஆண்டிற்கு பிறகு மற்ற BRIC நாடுகளின் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்படும். ஆனால் இந்தியாவின் வளர்ச்சி மட்டும் 3% மாக இருக்கும்.
  • இந்தியா உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், பணக்கார நாடாக இருக்காது. ரஷ்யாவைத் தவிர்த்து மற்ற BRIC நாடுகளில் ஏழ்மை இருந்து கொண்டு தான் இருக்கும்.
  • இந்தியாவின் நடுத்தர வர்க்கம் அதிக அளவில் உயரும். அதனால் உலகில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில் தான் அதிகமாக கார்கள் இருக்கும். அமெரிக்கா கூட இந்தியாவிற்கு அடுத்த நிலையில் தான்.

இது சாத்தியம் தானா ?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் பின் தங்கியே இருந்தன. ஆனால் 1960 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் இந்த நாடுகள் வளர்ச்சிப் பெற்றன. ஒரு காலத்தில் சோவியத் யூனியன், ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மிஞ்சி விடும் என்று கருதப்பட்டது. ஆனால் இது நடைபெறவில்லை. ஒரு நாட்டின் நீண்ட கால வளர்ச்சி விகிதத்தில், வளர்ச்சியும் தேக்க நிலைகளும் தோன்றுவது இயல்பு. தற்பொழுது சீனாவின் வளர்ச்சி விகிதம் 8% . இதே அளவில் கணக்கிடும் பொழுது சீனா 2050ஆம் ஆண்டு அமெரிக்காவை விட 25 மடங்கு வளர்ச்சி அடைந்ததாக கணக்கு வரும். ஆனால் ஒரு நாட்டின் வளர்ச்சி அவ்வாறு நடைபெறுவதில்லை. இத்தகைய நிலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டே BRIC நாடுகளின் வளர்ச்சி விகிதம் கணக்கிடப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சியில் வேலை செய்யும் வயதுடைய இளைஞர்கள் அதிகமாக இருப்பதும் ஒரு காரணம். இந்தியா மற்றும் பிரேசில் தவிர மற்ற நாடுகளில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 5% என்ற அளவில் இருக்கும். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2050 ஆம் ஆண்டு சீனா, அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் இருந்தாலும், தனி நபர் வருமானம் மற்ற எல்லா நாடுகளை விட குறைவாகவே இருக்கும். ஆனால் இப்பொழுது உள்ள நிலையை விட 35 மடங்கு உயர்ந்து இருக்கும்.

இத்தகைய வளர்ச்சி உண்மையிலேயே சாத்தியம் தானா என்பதை அறிய 1960 ல் தொடங்கி அடுத்து வந்த 50 ஆண்டுகளுக்கு இதே முறையில் கணக்கிடும் பொழுது, தற்பொழுதுள்ள வளர்ச்சி விகிதத்திற்கு நெருக்கமாகவே முடிவுகள் வந்துள்ளதாம். அதனால் இது கனவு அல்ல நடைமுறையில் சாத்தியமான ஒன்று தான் என்று Goldman sachs நிறுவனம் தெரிவிக்கிறது. தற்பொழுதுள்ள வளர்ச்சி நிலையே இந்த இலக்கை எட்டுவதற்கு போதுமானது. எந்த வித அற்புதங்களையும் இதற்காக நிகழ்த்த வேண்டிய அவசியமில்லை.

ஆனால் இந்த நிலையை எட்ட தேவையானவை

  • குறைந்த அளவிலான பணவீக்கம்
  • நிலையான ஆட்சி
  • தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரம்
  • அந்நிய முதலீடு
  • படிப்பறிவு – இந்தியாவில் தான் படிப்பறிவு மற்ற BRIC நாடுகளை விட குறைவாக இருக்கிறது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை நடைமுறையில் சாத்தியமாகுமா என்ற கேள்விகள் எழுகிறது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 5% என்ற அளவில் கணக்கிடப்பட்டிருக்கிறது. இது தற்பொழுதய நாட்டின் வளர்ச்சி விகிதமான 6%-6.5% விட குறைவு. நாட்டின் வளர்ச்சி 7% என்ற இலக்கை கடக்கும் என்று ப.சிதம்பரம் தெரிவித்திருந்ததும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்பொழுதுள்ள சூழ்நிலையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளனர். ஆனால் இதனை வேகமாக செய்ய வேண்டும். முதலில் விமான போக்குவரத்தில் அந்நிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த இடதுசாரிகள் பிறகு பெயரளவிற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு கப்சிப் ஆகி விட்டனர். அரசு உத்தேசித்துள்ள தொலைத் தொடர்பு மற்றும் காப்பீடு மட்டுமின்றி பிற துறைகளிலும் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும்.

படிப்பறிவு – கிரமப்புறங்களில் படிப்பறிவை அதிகரிப்பது மிகவும் அவசியம். அரசாங்கம் அதிக அளவில் கல்விக்காக செலவிடவேண்டும். இந்த ஆண்டு பட்ஜட்டில் சில நல்ல திட்டங்கள் இதற்கென அறிவிக்கப்பட்டிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. ஆனால் இது மட்டுமே போதாது. மோசமாக உள்ள கிராமப்புற கல்விக்கூடங்கள் சீர்செய்யப்படவேண்டும். அரசாங்கம் அளிக்கும் கல்வியின் தரம் உயர வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் மனிதவளமேம்படு மிகவும் முக்கியமான ஒன்று.

விவசாயம், இந்தத் துறைக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இப்பொழுது தான் அரசுக்கு வந்துள்ளது. நாட்டின் வளர்ச்சியில் விவசாயம் மிகவும் முக்கியம். நதி நீர் இணைப்பு திட்டம் செயல்படுத்த படுமா ? (நிச்சயமாக இது நிறைவேறாது தானே ?)

இலக்கு எட்டிவிடும் தூரத்தில் இல்லை தான். ஆனால் சரியாக திட்டமிட்டு நகர்ந்தால், எட்டி விடுவோம். எட்டுவோமா ?

Goldman sachs ன் அறிக்கையைப் படிக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள்

http://www.gs.com/insight/research/reports/99.pdf

சென்னையில் ஒரு மழைக் காலம்

October 28, 2004 at 1:23 pm | Posted in வகைப்படுத்தாதவை... | 2 Comments

மேட்ராசுல மழை வந்தாலே பேஜார் தான். அது இல்லாங்காட்டியும் மேட்ரோ லாரிக்கு காவ காத்து, அதுவும் வராம, மினரல் வாட்டர் வாங்கி கஜானா காலியாகிடும். இது எப்பவும் உள்ள மேட்டரு தான். அத்த உடுங்க.
நாம சொல்ல வர்ற மேட்டர். மய (மழை) பெய்ஞ்சா ரோட்டுல நடக்கறத பத்தி தான்.

அப்படித் தான் ஒரு நாளு, ஆபிசுல மீட்டிங்னு ஒரு வெள்ள கலர் சட்டையை உஜாலா போட்டு வெளுத்து போட்டுக்கிட்டு ஆபிசுக்கு கிளம்பறேன். நான் கிளம்பற வரைக்கும் சுள்ளுன்னு அடிச்சுக்கிட்டு இருந்த சூரியன், நான் வெளிய வந்த உடனே எஸ்கேப் ஆயிட்டான். மய கொட்ட ஆரம்பிச்சுடுச்சி. சரி ஆனது ஆவட்டும்னு ஒரு குடையை பிடிச்சிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டேன். ஆபிசு மீட்டிங் வேற மனசுல கபடி ஆட ஆரம்பிச்சுட்டுது. நல்ல மலை (மழை). நம்ம ஊருலத் தான் மய பெய்ஞ்சா காவேரி ஆறு ஓடுமே. அப்படி ஒரு ஆறு நான் போற வழியில ஓட ஆரம்பிச்சிட்டுது. கறுப்பு காவேரி. சென்னை ஸ்பேஷல் காவேரி.

என்னாடா இது வெள்ளை சட்டை வேற தெரியாத்தனமா போட்டுக்கிட்டோம். எவனாவது அர்ச்சனை பண்ணிட போறானேன்னு நினைச்சுண்டே இருக்கேன், ஒரு ஆட்டோக்காரன் சள்ளுன்னு தண்ணிய பீச்சு அடிக்கறான். இது மெயின் ரோடு கூட இல்ல. எதிர்தாப்ல ஆள் வர்றாங்கன்னு தெரிஞ்சே பண்றாங்கன்னு எனக்கு தோணிச்சு. உஜாலாவுல மாஞ்சி மாஞ்சி தோவிச்ச சட்டை இப்ப நெய்வேலி நிலக்கரி கலர்ல மாறினா கடுப்பு வருமா வராதா. நானும் கொஞ்சம் சத்தமாவே கத்திட்டேன்.

“புறம்போக்கு பாத்து போடா” அப்படின்னு.

வேகமா போன ஆட்டோ சல்லுன்னு திரும்பி வந்துடுச்சி.

“இன்னா சொன்ன” அப்படின்னு கேட்டான்.

ஏதோ வேகமா போறவன் அப்படியே புடுவான்னு நினைச்சி கத்தினா, இவன் நிறுத்திபுட்டு வரானே. ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேனோ. நம்ம தெம்புக்கு இதெல்லாம் தேவையா. பெரிய ஆளுங்க வீட்டுக்கே வரிசையா ஆட்டோ விடுவாங்க. நமக்கு இவன் ஒருத்தன் போதுமே. ஆளு நல்லா நம்ம பொன்னம்பலம் மாதிரி இருந்தான். சரி..நம்ம உடம்புக்கு இதெல்லாம் ஜாஸ்தின்னு முடிவு பண்ணி வடிவேலு கணக்கா பம்மி “ஒண்ணும்மில்லண்ணா..வெள்ளை சட்டை இப்படி ஆச்சேன்னு உணர்ச்சி வசப்பட்டு கத்திபுட்டேன்” அப்படின்னு அவனுக்கு ஒரு கும்புடு போட்டேன். அவனும் கையை சொடுக்கி நம்ம தலீவர் ஸ்டைல்ல ஏதோ சொல்லிட்டு போனான். தலைக்கு வந்தது தலைப் பாகையோட போயிடுச்சின்னு சந்தோசத்துல ஆபிசுக்கு போகாம லீவு போட்டுட்டு, மறுநாள் மேனேஜர் சிடுமூஞ்சிக்கிட்ட திட்டு வாங்கனப்ப இந்த மழை மேல பயங்கர வெறுப்பா போயிடுச்சு.

சரி நடந்தா தானே இந்த பிரச்சனை. டு வீலர்ல போயிடலாம்னு முடிவு பண்ணி ஒரு நாள் டு வீலர்ல கிளம்பறேன். லேசா தூறிக் கிட்டு இருந்துச்சு. சரி சீக்கரமா போயிடலாம்னு நினைச்சு கிளம்பிட்டேன். அப்புறம் தான் இந்த பிரச்சனை புரிஞ்சுது. நம்ம ரோட்டுல போற எந்த வண்டிக்கும் mud guard இருக்காதுன்னு எனக்கு தெரியாம போயிடுச்சி. நானும் என் முன்னாடி போற வண்டியை பாலோ பண்ணிக்கிட்டே போறேன். அந்த வண்டியோட பில்லியன்ல மழையில தொப்பலா நனைஞ்சிக்கிட்டே சிக்குன்னு ஒரு பிகர் லேசான காட்டன் சட்டையில, ஜின்ஸ் போட்டுக்கிட்டு இருந்தா, நீங்க பாலோ பண்ணுவிங்களா மாட்டிங்களா. நானும் அத்த தான் செஞ்சேன். அத்தோட ரிசல்ட்டு ஆபிசு போனதுக்கு அப்புறமா தான் தெரிஞ்சது. சட்டையெல்லாம் ஒரு புது டிசைன் போட்டிருக்கு. பிகரப் பாத்து ஜொல்லு விட்டதால அன்னைக்கும் சம்பளம் கட்டு.

நடந்தாலும் பிரச்சனை, டு வீலர்ல போனாலும் டாவு கிழியுது. எதுக்கு வம்பு. கார்ல சொகுசா போயிடலாம்னு முடிவு பண்ணி ஒரு நாள் கார்ல கிளம்பறேன். இந்த கார்ல போறப்ப என்னா பிரச்சனைன்னா. டு வீலர்ல போற பொடிப் பசங்க நேரா நம்ம கார் எதிர்த்தாப்புல வந்து கட் அடிப்பாங்க. அப்புறம் இந்த பாழாப்போன டிராப்பிக்ல ஊர்ந்துக்கிட்டே போறத்துக்குள்ள மண்டை கிழிஞ்சிடும். ஒரே ஆறுதல் என்னான்னா நம்ம “சுச்சியோட” ரொம்ப ஹாட்டான வாய்ஸ்ச கேட்டுக்கிட்டே போவலாம். அப்படி போய்க்கிட்டே இருக்கறப்ப ஒரு தபா என்னா பண்ணிட்டேன், யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்னு சல்லுன்னு ஒரு ரோட்டு ஓடையில வண்டிய உட்டு எடுத்தேன். சல்லுன்னு டு வீலர்ல போன ஒருத்தர் மேல அபிசேகம். ரியர் மிரர்ல பாத்து சந்தோசப் பட்டுக்கிட்டு சுச்சியின் ஹட் வாய்ச கேட்டுக்கிட்டு இருக்கேன், சட்ன்னு ரோட்ட மறிச்சுக்கிட்டு ஒரு பொன்னம்பலம் நிக்கறான். யோசிச்சு பாத்தா நம்ம ரியர் மிரர் அபிசேக பார்ட்டி.

கீழே இறங்குடாங்குறான்.

“என்னா கார்ல வந்தா நீ பெரிய …” என பேச, நாம மறுபடியும் வடிவேலு கணக்குல பம்ம கடைசில ஒரு வழியா பிரச்சனை முடிஞ்சி, மூட் அவுட்டாகி ஆபிசுக்கு மட்டம் போட்டுட்டேன்.

இப்பல்லாம் மழை பெய்ஞ்சா ஒரு பாட்டிலோட வீட்டுல செட்டில் ஆயிடுறேன். வேற வழி…

மழைக் காலத்துல நீங்க என்னா பண்றீங்க…

இந்தியா – 2025

October 26, 2004 at 1:08 pm | Posted in வகைப்படுத்தாதவை... | 6 Comments

நேற்று NDTV ல் நடந்த விவாதம்
இந்தியா இன்னும் 20 ஆண்டுகளில் பொருளாதார வல்லரசாக உருவாக முடியுமா?

அந்த விவாதத்தின் தொகுப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த Goldman sachs நிறுவனம் கீழ்க்கண்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

  • 2025 ஆம் ஆண்டு இந்தியாவின் GDP ஜெர்மனி நாட்டை விட அதிகமாக இருக்கும்
  • இந்தியாவின் நடுத்தர வர்க்கம் 10 பில்லயனாக மாறி விடும்
  • உலகத்தின் கச்சா எண்ணெய்யில் 7% சதவீதத்தை நாம் விழுங்கி விடுவோம்
  • பங்குச் சந்தை, சந்தை மூலதனம் (Market Capitalization) 10 மடங்கு அதிகரித்து விடும்

ஆனால் இதனை எட்டுவதற்கு நமக்கு தடையாக இருக்கப் போவது

  • நாட்டின் படிப்பறிவு அதிகரிக்க வேண்டும்
  • உள்கட்டுமானம்

இதனைத் தவிர வேறு என்ன இடர்பாடுகள் இருக்கும்

  • தற்பொழுது வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் 40% மக்களை முன்னேற்றாத வரையில் இது ஒரு பகல் கனவாகவே இருக்கும்
  • இந்தியாவின் இதயமான விவசாயம் முன்னேற்றப் பட வேண்டும்
  • பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். இடது சாரிகளை உள்ளடக்கிய எந்த அரசும் இதனை முழுமையாக செயல்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது
  • லாலுக்களும், முலயாம்களும், இடதுசாரிகளும் இவர்களைப் போன்ற மற்ற அரசியல்வாதிகளும் நிச்சயம் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் குட்டிச் சுவர்களாகவே இருப்பார்கள்

ஆறுதலாக இருப்பவை

  • மிக அதிக அளவில் இருக்கும் இந்தியாவின் படித்த இளைய தலைமுறை

இந்தியா இன்னும் 20 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்டி விடுமா ?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

http://tamilstock.blogspot.com/

October 14, 2004 at 1:28 pm | Posted in வகைப்படுத்தாதவை... | 2 Comments

என்னோட தொந்தரவை பொறுத்துகிட்டு தொடர்ந்து இந்த வலைப் பக்கத்தை படிக்கறவங்க எல்லாருக்கும் நன்றிங்க…

பங்குச் சந்தை என்ற பெயருடன் இந்த புது முகவரிக்கு போறேன்

http://tamilstock.blogspot.com/

நீங்களும் அங்க வந்து படிப்பீங்க தானே?

இந்த தனித் தளம் யோசனையை சொன்ன அன்பு மற்றும் என் தோஸ்துகளுக்கு thanks.

அறிக்கைகளும் முதலீடும்

October 13, 2004 at 11:58 am | Posted in வகைப்படுத்தாதவை... | 1 Comment

இன்று இரு மென்பொருள் நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. TCS மற்றும் Hughes நிறுவனங்களில், TCS அறிக்கை அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துள்ளது. அதனுடைய நிகர லாபம் 14.1% அதிகரித்து 576.40 கோடி லாபத்தை இந்த காலாண்டில் எட்டியுள்ளது. ஆனால் Hughes நிறுவனத்தின் லாபமோ 3.64% மட்டுமே அதிகரித்துள்ளது.

இன்று மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பங்குச் சந்தைக்கு விடுமுறை. நாளைய வர்த்தகத்தில் TCSன் பங்குகள் உயரக் கூடும். Hughes பங்குகள் சரியக்கூடும்.

பத்ரி பின்னுட்டத்தில் தெரிவித்து இருந்தது போல அறிக்கைகளின் ஏற்றத்தாழ்வுகளால் இந்த நிறுவனங்களின் அடிப்படையில் எந்த ஒரு மாற்றமும் நிகழ்வதில்லை (பெரிய இழுப்புகளை சந்தித்து இருந்தாலொழிய). ஆனால் அந்த காலாண்டில் அந்த நிறுவனங்களின் செயல்பாட்டை பொறுத்து பங்குகளின் விலையில் மாற்றம் ஏற்படும். நம்மைப் போன்ற முதலீட்டாளர்களுக்கு இந்த அறிக்கைகள் சில செய்திகளை தெரிவிக்கும்.

இன்போசிஸ் பங்குகள் இப்பொழுது நல்ல லாபகரமான ஒரு முதலீடாக இருக்குமென பல பங்குத் தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நீண்ட கால முதலீடு செய்பவர்களுக்கு இது மிகவும் ஏற்ற ஒரு முதலீடாக இருக்கும். இதன் விலை 1800 – 1850க்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சொல்கின்றனர்.
தற்பொழுது இதன் விலை – 1711. மூன்றாம் காலாண்டில் தன்னுடைய வருவாய் ரூ1,869 கோடி முதல் ரூ1,882 கோடி வரை இருக்கும் என அறிவித்துள்ளதால் (இது கடந்த ஆண்டுடன் ஓப்பிடும் பொழுது 50% அதிகம்) அதன் பங்கு விலையில் ஏற்றம் இருக்கும் என கருதப்படுகிறது.

அதைப் போல TCS பங்குகளும் நல்ல லாபகரமான முதலீடாக இருக்கும்.

எல்லா மென்பொருள் நிறுவனங்களுமே offshoring மூலமாக நல்ல லாபம் அடைந்துள்ளனர். இவர்கள் பிற்காலத்தில் சந்திக்க கூடிய சவால் – சில பெரிய அமெரிக்க நிறுவனங்கள் நேரடியாக தங்கள் கிளைகளை இங்கு துவக்க ஆரம்பித்துள்ளனர். Goldmansachs, Morgan Stanley போன்ற நிறுவனங்கள் இப்பொழுது தங்களுடைய மென்பொருள் நிறுவனங்களை இந்தியாவில் வெள்ளோட்டம் பார்க்கின்றனர். அது வெற்றியடையும் பட்சத்தில் பல நிறுவனங்களும் இதையே பின்பற்றக்கூடும். இது இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் கடும் சவாலாக இருக்கும்.

இது உடனடியாக நடக்க கூடிய ஒன்றல்ல என்பது இந்த நிறுவனங்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும்.

லாபம் போதும் சாமி…

October 12, 2004 at 4:07 pm | Posted in வகைப்படுத்தாதவை... | 1 Comment

இரு நாட்கள் – இரு வேறு அறிக்கைகள். ஒரு அறிக்கை பங்குச் சந்தையின் குறியீடுகளை சரிய வைத்தது. மற்றொன்று நம்பிக்கையை அளித்தது. ஆனாலும் சந்தை இரு நாட்களும் கரடிகளின் ஆணைக்குட்பட்டு சரியத் தொடங்கியுள்ளது.

திங்களன்று எம்பசிஸ் Mphasis BFL நிறுவனம் அளித்த அறிக்கை பங்குச் சந்தையில் மென்பொருள் பங்குகளை சரிய வைத்தது. இந்த காலாண்டில் Mphasis BFLக்கு வருவாய் குறைந்துள்ளதால் (இழுப்பு அல்ல) மொத்த மென்பொருள் நிறுவனங்களும் இத்தகைய நிலையில் தான் இருக்குமோ என்ற அச்சத்தில், இன்போசிஸ் உட்பட அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சரிவை எதிர்கொண்டன. வருவாய் இழுப்பு அந்நியச்செலவாணியாலேயே எற்பட்டதாக Mphasis BFL நிறுவனம் கூறியது. மற்றபடி தங்கள் நிறுவனம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிவித்தது. சிறு பொறி கிடைத்தால் பற்றிக் கொள்ளும் பங்குச் சந்தை அதன் வருவாய் இழுப்பையே அதிகம் கவனித்தது.

இன்று காலை மென்பொருள் பங்குகளின் வர்த்தகம் இன்போசிஸ் நிறுவனத்தின் அறிக்கையைப் பொருத்தே அமையும் என்பதால் ஒரு சிறு பரபரப்பு என்னுள் எழுந்தது. வேறு என்ன. இன்போசிஸ் நல்ல அறிக்கையை தரும் என்ற எண்ணத்தில் நானும் சில இன்போசிஸ் பங்குகளை வாங்கி வைத்திருந்தேன்.

Mphasis BFL, Infosys ஆகிய இரண்டு நிறுவனங்களையும் ஒரே அளவில் வைத்து பார்க்க இயலாது. இன்போசிஸ் நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனம். பல துறைகளிலும் தனது முத்திரையை பதித்துள்ளது. அந்த நம்பிக்கை இருந்தாலும் போட்ட பணம் என்னகுமோ என்ற கவலை ஒரு புறம்.

ஆனால் அனைவரின் கவலையையும் போக்கி இன்போசிஸ் நிறுவனம் ஒரு சிறந்த அறிக்கையை கொடுத்தது.
இன்போசிஸ்ஸின் வருவாய் இந்த காலாண்டில் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த காலாண்டில் மட்டும் சுமார் 32 புதிய Clients இந்த நிறுவனத்திற்கு கிடைத்துள்ளனர். மொத்த Clients எண்ணிக்கை 431. Offshore வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. சுமார் 5000 பேர் நிறுவனத்தில் புதிதாக சேர்ந்துள்ளனர். வரும் காலாண்டில் மேலும் 4000 பேர் சேர்க்கப்படுவர்.

Mphasis BFL போன்ற நிறுவனத்திற்கும், இன்போசிஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனத்திற்கும் உள்ள ஒரு வேறுபாட்டை ஒரு விஷயம் படம்பிடித்து காட்டியது. Mphasis BFL நிறுவனம் அந்நியச்செலவாணி விஷயத்தில் நஷ்டம் கண்டது. ஆனால் இன்போசிஸ் நிறுவனமோ Forward contracts மூலம் தனது அந்நியச்செலவாணியை திறம்பட நிர்வாகித்துள்ளது (சரி..அது என்ன Forwards. FX Forwards எனப்படுவது அந்நியச்செலவாணியில் தினமும் நிகழும் மாற்றத்தில் இருந்து ஒரு நிர்வாகம் தன்னை தற்காத்து கொள்ள மேற்கொள்ளும் ஒரு உத்தி. உதாரணமாக இம் மாதம் ஒரு டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 45.80. ஆனால் தினமும் நிகழும் பல்வேறு மாற்றத்தினால் அது 45க்கும் வரலாம், 48க்கும் செல்லலம். அந்நியச்செலவாணி அதிகமாக பரிமாற்றம் செய்யும் ஒரு நிறுவனம் தன்னை இத்தகைய நிலையற்ற தன்மையில் இருந்து தற்காத்து கொள்ள FX Forwards எனப்படும் ஒரு ஒப்பந்தத்தை வங்கிகளிடம் செய்து கொள்ளும். அதாவது ஒரு டாலரை ரூ 46.50க்கு ஒரு மாதம் கழித்து மாற்றிக் கொள்கிறேன் என்பது தான் அந்த ஒப்பந்தம். பறிமாற்றம் செய்யும் நாளில் அது 45 ஆக இருந்தாலும், 48ஐ எட்டினாலும் 46.50க்குத் தான் அந்த பறிமாற்றம் நிகழும். இது ஒரு சிக்கலான கணக்கு). ஆனால் Mphasis BFL நிறுவனம் தன்னை இந்த விதத்தில் தற்காத்து கொள்ளாததால் இந்த காலாண்டில் நிகழ்ந்த நிலையற்ற பணப் பறிமாற்றத்தில் இழுப்பை எதிர்கொண்டது.

சரி…பங்குச் சந்தை என்ன ஆனது. இன்போசிஸ்ஸின் பங்குகள் ஆரம்பத்திலேயே சுமார் 40 ரூபாய் எகிறியது.
பங்கு வர்த்தகத்திலும் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் பங்குகள் அதிக விலையை எட்டியதால் லாபம் அடையும் நோக்கில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கினர். இதனால் பங்குகளின் விலை சரியத் தொடங்கியது. இன்போசிஸ் பங்குகள் கூட சற்று சரிவடைந்து ஓரளவிற்கு லாபமுடன் (25 ரூபாய் அதிகமாக) இருந்தது.

BSE 41 புள்ளிகள் சரிவடைந்து 5,677 என்ற அளவிலும், NSE 24 புள்ளிகள் சரிவடைந்து 1788 என்ற அளவிலும் வர்த்தகம் முடிவடைந்தது. பங்குச் சந்தை எப்பொழுதுமே தொடர்ந்து லாபகரமாக சென்று கொண்டிருந்தால் அடுத்த சில நாட்களில் லாபம் போதும் சாமி என எல்லோரும் பங்குகளை விற்ப்பார்கள். அது தான் கடந்த இரு தினங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

மணிசங்கர் அய்யர் பிரதமரை சந்தித்து பெட்ரோல், டீசல் விலையேற்றம் பற்றி விவாதிக்கப் போகிறார் ? விலை ஏறினால் எண்ணெய் விற்ப்பனை நிறுவனங்களான HPCL, BPCL போன்ற பங்குகளுக்கு குஷியாக இருக்கும். நமக்கு ?? பெட்ரோல் பங்க் பக்கம் போகும் பொழுது வயிறு எரியும்.

காளைகளின் தகவல்கள்

October 10, 2004 at 8:52 am | Posted in வகைப்படுத்தாதவை... | 3 Comments

பங்குச் சந்தையில் எப்பொழுதும் எதிர்காலத்தைப் பற்றிய மதிப்பீடுகள் தான் முக்கியம். கடந்து வந்த பாதைகளைப் பற்றிய கற்பனையிலேயே இருந்தால் அதள பாதாளம் தான்.

கடந்த வாரம், BSE பங்குக் குறியீடு 82 புள்ளிகளும், NSE 42 புள்ளிகளும் உயர்ந்தது.

இந்த வாரம் எப்படி இருக்கும் ?

வரும் வாரம் பல நிறுவனங்கள் தங்களது இரண்டாம் காலாண்டு அறிக்கைகளை (Q2 Results) வெளியிடும். அந்த அறிக்கையைப் பொறுத்துத் தான் பங்குச் சந்தையின் போக்கு அமையும். ஒவ்வொரு ஆண்டும் இன்போசிஸ் நிறுவனம் முதலில் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும். கடந்த காலாண்டில் இன்போசிஸின் சிறப்பான செயல்பாடு இந்த காலாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது. அந்த அறிக்கையைப் பொருத்து இன்போசிஸ் பங்குகள் விலையில் மாற்றம் தெரியும்.

சரி எந்தப் பங்குகளை நாம் வாங்கலாம் ?

சில நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து பெரியக் காளைகள் தெரிவிக்கும் தகவல்களைத் திரட்டி தருகிறேன்.

இந்த வார “காளைகளின் தகவல்கள்”.

இந்த வாரம் பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கைகளை அறிவிப்பதால் அந்தத் துறைப் பங்குகளை வாங்கலாம். அறிக்கைகளின் நிலவரத்தைப் பொருத்து அந்தப் பங்குகளின் விலை ஏறக்கூடும்.

கச்சா எண்ணெய்யின் விலை ஏறுமுகமாக இருப்பதால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனப் பங்குகளான ONGC போன்றவை நல்ல லாபகரமாக் இருக்கும். ஆனால் எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளான HPCL, BPCL போன்றவற்றில் இருந்து கொஞ்சம் விலகி இருப்பது நல்லது. அரசாங்கம் பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றுவதில்லை என்ற முடிவில் இருந்து மாறினால் இந்த நிறுவனப் பங்குகள் முன்னேறும்.

மற்றபடி ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகளும், வங்கிப் பங்குகளும் விலை ஏறக்கூடிய சாத்தியக் குறுகள் இருப்பதாக காளைகள் சொல்கின்றன.

ரிலயன்சைப் பற்றி எல்லோரும் ஆகா ஓகோ என்று சொல்கின்றனர்.

இந்த வாரம் பங்குச் சந்தை காளைகளின் ஆதிக்கத்தில் இருக்குமா ? கரடிகளின் ஆணைக்கு உட்படுமா ?

காளை, கரடி இந்த இரண்டு சந்தையிலுமே சில பங்குகள் நல்ல லாபகரமாகத் தான் இருக்கும். நான் திரட்டிய இந்த பங்குகள் அந்த வரிசையில் இருந்தால் நல்லா இருக்கும் ? பார்ப்போம் ?

பணப் பெருக்கம்

October 9, 2004 at 9:45 am | Posted in வகைப்படுத்தாதவை... | Leave a comment

தீபாவளிக்கு ஒரு உடை வாங்க வேண்டும் என்றதும் எதையெல்லாம் யோசிப்போம்

எவ்வளவு விலை ?
துணி எப்படி உள்ளது ?
விலைக்கு ஏற்ற துணி தானா ?
துவைத்தால் சுருங்கிப் போகுமா ?
நிறம் மங்கிப் போகுமா ?
நம்முடைய நிறத்திற்கு ஏற்றதாக இருக்குமா ?

இன்னும் யோசித்து, கடையிலுள்ள உடைகளை அலசி ஆராய்ந்து, கடை சிப்பந்தியை கடுப்பேற்றி, எல்லா வகையிலும் ஏற்றதாக சில துணிகளை தேர்ந்தெடுத்து அதிலிருந்து ஒரு துணியை இறுதியில் தேர்ந்தெடுப்பதற்குள் தீபாவளி நெரிசலில் வேர்த்து விடுகிறது.

ஆனால் பங்குச் சந்தையில் பங்குகள் வாங்கும் பொழுது இந்த அளவுக்கு நாம் யோசிப்பதே இல்லை. பெரும்பாலும் யாரோ ஒருவர் சொல்வதை கேட்டு விடுகிறோம். நாமாக யோசித்து வாங்கினாலும் விலைக் குறைந்த பங்குகளாக நிறைய வாங்கி அது விலை ஏறும் பொழுது நிறைய பணம் பார்க்கலாம் என்று பேராசைப் படுகிறோம்.

உண்மையில் நடப்பது என்ன ?

விலைக் குறைந்த பங்குகள் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இது மிகச் சிறிய நிறுவனங்களாக இருப்பதால் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு விலை ஏறுவதற்கான சாத்தியக் குறுகள் இல்லை. பெரும்பாலும் இருக்கின்ற நிலையிலேயே இருக்கும். இல்லாவிட்டால் சரியும். இதனால் போட்ட முதலீட்டிற்கு நாம் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. பணம் காணாமல் கூட போகும்.

அதற்காக குறைந்த விலைப் பங்குகள் எல்லவற்றையும் விட்டு விலக வேண்டும் என்பது அர்த்தமாகாது. குறைந்த விலையோ அதிக விலையோ நல்ல நிறுவன பங்குகளாகத் தான் வாங்க வேண்டும்.

எப்படி அந்த நிறுவன பங்குகளை அடையாளம் கண்டு கொள்வது ?

ஒரு நிறுவன பங்குகள் வாங்குவதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை ஆராய வேண்டும்.
தற்பொழுது பங்குச் சந்தையின் நிலை என்ன ?
குறுகிய கால முதலீடா இல்லை நீண்ட நாள் முதலீடா ?
நாம் தேர்ந்தெடுக்கும் பங்குகள் காளைச் சந்தையில் எப்படி இருந்தது, கரடிச் சந்தையில் எவ்வளவு சரிந்தது.
அதனுடைய தற்பொழுதய விலை (Valuations) சரியான அளவில் உள்ளதா இல்லை அதிக விலையிலோ, குறைந்த விலையிலோ இருக்கிறதா ?
அந்த நிறுவனத்தின் எதிர்கால் செயல்பாடுகள் எப்படி இருக்கும் ?

என்று மண்டையை உடைத்து ஆராய வேண்டும். செலவழிக்க கூடிய துணிகளுக்கே யோசிக்கும் பொழுது, முதலீடு செய்யும் பணத்திற்கு யோசிப்பதில் பாதகம் இல்லை.

பங்குச் சந்தையில் சரியான நேரத்தில் நுழைவது மிகவும் அவசியம். பங்குச் சந்தை குறியீடு சரியும் பொழுது நாம் அஞ்சி ஓடி விடுகிறோம் ? விலை அதிகரிக்கும் பொழுது நுழைந்து அதிக விலையில் பங்குகளை வாங்கி நஷ்டப் படுகிறோம். மாறாக குறைந்த விலையில் பங்குகளை வாங்கி அதிக விலை இருக்கும் பொழுது விற்க வேண்டும்.

சரி மறுபடியும் ஒரு சின்ன கணக்கு

இந்த முறை விலை குறைந்த ஒரு பங்கு பற்றியது

SAIL (Steel Authority of India) – சென்ற மாதம் இந்த நிறுவன பங்குகளின் விலை – ரூ39 என்ற அளவில் இருந்தது.

100 பங்குகளை சென்ற மாதம் வாங்கி இருந்தால்

100 x 39 – 3900

இன்று அதன் விலை – ரூ50

100 x 50 – 5000

இந்த லாபத்தை நாம் பெற்றிட என்ன செய்திருக்க வேண்டும் ?

தினசரிகளில் “Business” என்ற ஒரு பிரிவு இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

காளை..கரடி..பன்றி..

October 8, 2004 at 5:56 am | Posted in வகைப்படுத்தாதவை... | 1 Comment

பங்குச் சந்தையில் நான் கற்றுக் கொண்ட முதல் வார்த்தை Bull Market – காளைச் சந்தை. இதைக் கற்றுக்கொண்ட வார்த்தை என்பதை விட விநோதமாக தெரிந்த ஒரு உருவத்தை என்ன என்று தோண்ட ஆரம்பித்த பொழுது புரிந்து கொண்ட அர்த்தம் எனக்கொள்ளலாம். பங்குச் சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இங்கே இருந்து என்ன செய்யப்போகிறாய்? போய்க் கற்றுக்கொண்டு வா என்று என்னுடைய நிறுவனம் நியுயார்க்குக்கு எட்டி உதைக்க, அந்த நிறுவனத்திற்குள் நுழையும் பொழுது எங்கு நோக்கினும் காளைகள் வாலைத் தூக்கி கொண்டு, மிரட்டின (Merrill Lynch நிறுவனம் தான். அந்த நிறுவனத்தின் சின்னம் காளை) என்னடா இது நம்ம ஊர் ஜல்லிக்கட்டு இந்த ஊர் வரைக்கும் வந்து விட்டதோ என்று தோன்றியது. சரி கொஞ்சம் ஊர் சுற்றலாம் என்று அன்று மாலை இரட்டைக் கோபுரங்களைப் பார்த்து வியந்து கொண்டே நடந்த பொழுது சற்றுத் தொலைவில் நியுயார்க் பங்குச் சந்தை அருகில் மற்றொரு பெரிய காளைச் சிலை. Merrill Lynch சின்னத்தை இங்கு எதற்காக வைத்திருக்கிறார்கள்? தெரியாவிட்டால் மண்டை வெடித்து விடும் போல இருந்தது.

மறுநாள் என்னுடன் வேலை பார்த்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்க, அவர் என்னை மேலும் கீழும் ஒரு மாதிரியாகப் பார்த்தார். இது கூடத் தெரியாமல் நீ என்னத்த செயலி எழுதிக் கிழித்து, அதை வைத்து நாங்கள் வியபாரம் பண்றது என்பது போல இருந்தது அந்த பார்வை. சரி நீ என்னத்த நினைக்கிறியோ நினைச்சிக்கோ. விஷயத்தை சொல்லுடா! என்று மனதுள் நினைத்து கொண்டே (பின்ன? வெளிய சொல்ல முடியுமா?) பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு அவரைப் பார்த்தேன்.

அப்பொழுது தெரிந்துகொண்ட விபரங்கள்தான் பங்குச் சந்தை மீது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

காளைச் சந்தை என்பது பங்கு வர்த்தகம் நல்ல லாபகரமாக உள்ள சூழ்நிலையைக் குறிப்பது. பங்குக் குறியீடுகள் உயர்வதும், பங்கு விலைகள் உயர்ந்து கொண்டே இருப்பதும் காளைச் சந்தையில் தான்.
பங்குக் குறியீடுகள் வீழ்ச்சி அடைவதையும், பங்கு விலைகள் சரிவடைவதையும் கரடிச் சந்தை என்று சொல்வார்கள். கரடிச் சந்தையை விட்டு முழுதாக விலகாமல் நல்ல நிறுவன பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கிப் போடுவது நல்லது.

காளை, கரடி என இருவேறு சந்தைகள் இருக்கின்றன என்று எண்ண வேண்டாம். ஒரே சந்தைதான். அன்றைய நிலவரத்தை வைத்து, காளை என்றும் கரடி என்றும் வர்ணிப்பார்கள்.

அப்படியானால், பன்றி என்பது?

“Bulls make money,
bears make money,
but pigs just get slaughtered!”

பங்குச் சந்தையைப் பற்றி தெரிந்தவர்கள், காளைச் சந்தையிலும் பணம் பார்க்கலாம், கரடிச் சந்தையிலும் பணம் பார்க்கலாம். ஆனால் பங்குச் சந்தைப் பற்றித் தெரியாமல் மனம் போன போக்கில் அடுத்தவர் பேச்சைக் கேட்டு முதலீடு செய்துவிட்டுப் பிறகு லபோ திபோ என அடித்துக்கொள்பவர்கள் பன்றிகளைப் போன்ற்வர்கள். அவர்கள் பங்குச் சந்தையில் மோசமாக செத்துப் போவார்களாம்.

என் கனவில் அடிக்கடி பன்றிகள் தோன்றுவது ஏன் என்று புரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன் ?

இன்றைய சூடான பங்கு

October 7, 2004 at 8:12 am | Posted in வகைப்படுத்தாதவை... | Leave a comment

இன்று NTPC (National Thermal Power Corporation) நிறுவன பங்குகள் ஆரம்ப பொது விலைக்குறிப்பீட்டிற்கு வந்துள்ளது (Initial Public Offer – இதன் சரியான தமிழாக்கம் தெரியவில்லை. ஆனால் “ஆரம்ப பொது விலைக்குறிப்பீடு” அந்த அர்த்தத்தை பிரதிபலிக்கும். பங்குச் சந்தையின் பல சொற்களை தமிழ்ப் படுத்தலாமா என்று ஒரு யோசனை. ஏற்கனவே அத்தகைய சொற்கள் இருந்தால் சொல்லுங்களேன். பத்ரி கூறிய “பரஸ்பர நிதி” போல).

அது என்ன IPO ?. ஒரு நிறுவனம் முதல் முறையாக பங்குகள் வெளியிடும் பொழுது ஒரு விலை நிர்ணயித்து, தனது பங்குகளை பொது விற்பனைக்கு வழங்கும். இது முதன்மைச் சந்தை எனப்படுகிறது. இதில் விற்ற பின் தான் இரண்டாம் சந்தையான பங்குச் சந்தையில் சேர்க்கப்படும் (Listing).

சரி…விஷயத்திற்கு வருவோம். NTPC நிறுவன பங்குகள் இன்று முதல் பொது விற்பனைக்கு வருகிறது. இதனை வாங்கலாமா வேண்டாமா?

இதைப் பற்றிய ஒரு சின்ன ஆய்வு

மின் உற்பத்தி செய்யும் நிறுவனமான NTPC நாட்டின் மின் உற்பத்தியில் 27 சதவீதத்தை தன் கையில் வைத்துள்ளது. அது மட்டுமின்றி தற்பொழுது நீர்மின் நிலையங்களை தொடங்குவதற்கும் உத்தேசித்துள்ளது. இது இந்த நிறுவனம் எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்படக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

ஆனால் பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால் அரசியல்வாதிகளின் கோமாளித்தனத்தினால் இந்த நிறுவனத்தின் வருவாய் தேய்ந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இவர்களின் இலவச மின்சார அறிவிப்புகள் இந்த நிறுவனத்தின் லாபத்தை கடுமையாக பாதிக்கும். அதைப் போல இந்த நிறுவனத்தில் இருந்து மின்சாரம் பெறும் மாநில மின்வாரியங்கள் அதற்கான பணத்தை செலுத்த மறந்து விடுகின்றன. ஆனால் இந்தப் பிரச்சனை இப்பொழுது ஒரளவிற்கு தீர்க்கப்பட்டு விட்டது. 2004 ஆம் ஆண்டுக்கான பாக்கி பத்திரமாக வந்து சேர்ந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் 85கோடி பங்குகள் 52 முதல் 62 ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பங்குகள் கிடைக்க கூடிய சாத்தியக் குறுகள் குறைவு என்பதால் மும்மை கள்ளச் சந்தையில் 12 ரூபாய் அதிகம் வைத்து விற்கபடுகிறதாம். பங்கு விற்பனை தொடங்கிய சில மணி நேரத்தில் விற்பனைக்கு உள்ள பங்குகளை விட இரண்டு மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்து உள்ளதாம்.

சரி போகட்டும்… நாம் உரியமுறையில் விண்ணப்பிப்போம். கிடைத்தால் நல்லது. இல்லாவிட்டால் குடி முழ்க போவதில்லை.

இன்று பங்குச் சந்தையின் நிலை என்ன ?. B.S.E குறியீடு 70 புள்ளிகள் முன்னேறி 5784 க்கும், N.S.E. 20 புள்ளிகள் உயர்ந்து 1815 க்கும் வந்துள்ளது. இந்த அளவில் இருந்து 6000 நோக்கி நகரக்கூடிய சாத்தியக்கூறுகள் தெரிகிறது. பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குங்கள். சற்று கவனமாக தெரிவு செய்யுங்கள்.

Next Page »

Create a free website or blog at WordPress.com.
Entries and comments feeds.