தீபத் திருநாள்

November 27, 2004 at 8:19 am | Posted in வகைப்படுத்தாதவை... | Leave a comment

சின்ன சின்ன விளக்குகள் ஒளிவீசும் அழகிய திருநாள், கார்த்திகை திருநாள். எல்லா வீடுகளிலும் தோன்றும் இந்த தீப ஒளி கண்கொள்ளா காட்சி. என் சிறிய வயதில் தீபாவளி, பொங்களுக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த கொண்டாட்டம் இந்த கார்த்திகை திருநாள் தான். ஊர் அழகாக இருக்கிறது என்பதற்காக அல்ல. கார்த்திகையின் போது கார்த்தி சுற்றுதல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

நான்கு கட்டைகளை வைத்துக் கட்டி அதன் அடியில் ஒரு துணியில் அடுப்பு கரி வைத்து, கட்டையின் முனையில் கயிறு கட்டி, அடுப்பு கரியை கொளுத்தி, கயிறு பிடித்து தலைக்கு மேலே சுற்ற வேண்டும். எங்கள் பகுதியில் இதைக் கார்த்தி சுற்றுதல் என்று தான் சொல்வார்கள். மற்ற பகுதியில் என்ன பெயர் என்பது தெரியவில்லை. கார்த்தி சுற்றும் பொழுது கொட்டும் பூ போன்ற நெருப்பு பொறி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். யார் கார்த்தியில் அதிக பூ கொட்டுகிறது என்ற போட்டி கூட சிறுவர்கள் மத்தியில் நடக்கும். அடுப்பு கரியை விட, பனை மரத்தின் பூவைக் கொண்டு கார்த்தி சுற்றும் பொழுது பூ அதிகமாக விழும். பார்க்க மிக அழகாக இருக்கும்.

எங்கள் பகுதியில் பனை மரமெல்லாம் கிடையாது. சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராமங்களில் தான் பனைமரம் இருக்கும். பனை மரம் ஏறும் தெம்பெல்லாம் எனக்கு இருந்தது கிடையாது. என்னுடன் இருக்கும் சில சிறுவர்களின் கார்த்தியில் அழகாக பூ கொட்டுவதை பொறாமையுடன் பார்ப்பேன். என்னுடைய ஏக்கத்தைப் பார்த்து விட்டு யாரோ ஒரு உறவினர் மூலம் என் பாட்டி ஒரு வருடம் பனை மரத்தின் பூவை தருவித்து கொடுத்தார்.

பனை மரத்தின் பூவை நன்றாக சுட வேண்டும். ஒரு குழி தோண்டி அதில் பனை மரத்தின் பூவைக் கொட்டி சுட வேண்டும். சரியான பதம் வந்தவுடன் அதனை கார்த்தியில் வைத்து, நெருப்பு பற்ற வைத்து சுற்ற வேண்டும். அதில் கொட்டும் பூ பார்பதற்கே அழகாக இருக்கும். எங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் மைதானத்தில் எல்லா சிறுவர்களும் தங்கள் கார்த்தியுடன் கூடி சுற்றுவார்கள். மூன்று நாட்கள் நடக்கும் இந்த சுற்றல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மூன்றாம் நாள் கார்த்தி சுற்றி விட்டு தூர எறிந்து விட்டு வருவோம். ஒவ்வொரு பண்டிகைக்கும் தான் எத்தனை விதமான தனிச் சிறப்பு. கொண்டாட்டம்.

சென்னைக்கு வந்தப் பிறகு வெறும் அகல் விளக்குடன் பண்டிகை நிறைவு பெற்று விடுகிறது. இன்னும் கூட கிராமங்களில் கார்த்தி சுற்றி கொண்டு தான் இருக்கிறார்கள். நகரத்தில் பிறக்கப் போகும் என் பிள்ளைகளுக்கு இந்த கொண்டாட்டம் இருக்காது என்று நினைக்கும் பொழுது வருத்தமாகத் தான் இருக்கிறது.

தண்ணீர்… தண்ணீர்…

November 17, 2004 at 1:19 pm | Posted in வகைப்படுத்தாதவை... | Leave a comment

சென்னையின் பரபரப்பில் இருந்து விலகி, சொந்த ஊருக்கு, ஒரு நீண்ட விடுமுறையில் செல்லும் வாய்ப்பு தீபாவளி பண்டிகை மூலமாக வாய்த்தது. கணினி, இணையம் என்று தினமும் சந்திக்கும் தோழர்கள் இல்லாமல், புத்தகத்தை மட்டுமே கொண்டு நேரத்தை கழிப்பதில் ஒரு தனி இன்பம் தான். தீபாவளியன்று ஒரு நல்ல நிகழ்வாக எங்கள் பகுதியில் மின்சாரம் தடை பட்டு விட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்காமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த நண்பர்களுடனும், அண்டை வீட்டாருடனும் நல்ல அரட்டையடிக்க முடிந்தது. ஒன்றும் உருப்படியாக பேசா விட்டாலும், உறவுகளை வளர்த்து கொள்ள அரட்டைகள், வெட்டி அரட்டையாக இருந்தாலும், உதவுகின்றன. இடையிடையே, ஒவ்வொரு வீட்டிலிருந்தும், பல விதமான சுவையுடன் பலகாரங்கள். நன்றாக பொழுது கழிந்தது. மின்சாரம் இருந்திருந்தால், நண்பர்கள் சானல்களில் முழ்கி என்னை மறந்திருப்பார்கள். நம்முடைய மின்வாரியத்தின் தலைசிறந்த சேவைக்கு என் மனதார நன்றியை முதல் முறையாக செலுத்தினேன். நான் நன்றி செலுத்தியது அவர்கள் காதுகளுக்கு எட்டியது போலும். மாலையில் மின்சாரம் வந்து விட்டது. நண்பர்கள் பறந்து போய் விட்டார்கள்.

ஊருக்கு செல்லும் வழியெங்கும் நீண்ட நாட்களுக்குப் (வருடங்கள் ?) பிறகு பசுமையை பார்க்க முடிந்தது. ஆறு, ஏரி, கால்வாய் என எல்லா நீர் ஆதாரங்களிலும் தண்ணீர்… தண்ணீர்… வருண பகவான் கருணை இந்த வருடம் கொஞ்சம் அதிகம் தான். ஆனால கிடைத்த தண்ணீரை சேர்த்து வைத்திருக்கிறோமா ? இல்லை என்கிறது செய்திகள். ஹிந்து நாளிதழில், சமீபத்தில் வெளியான கட்டுரையில் வீராணம் ஏரியின் உபரி நீர் வெளியேறிக் கொண்டிருப்பதாகவும், நம்முடைய Water Management மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. ஏரி, குளங்கள் தூர்வாரப்படாமல் புதார்கள் மண்டி நிறைய மழை நீர் சேமிக்கப்படாமல் வீணாகிறது. புதியதாக எந்த நீர் ஆதாரங்களையும் அரசு உருவாக்குவதில்லை. ஏதோ தமிழகத்தின் பழைய மன்னர்கள் புண்ணியத்தில் வீராணம் போன்ற ஏரிகள் கிடைத்திருக்கின்றன. இருக்கின்ற ஏரி, குளங்களின் கொள்ளளவும் குறைந்து கொண்டு தான் இருக்கிறதே தவிர, அதிகரிக்க வேண்டிய எந்த நடவடிக்கையும் எடுக்கப் படுவதில்லை. மழை பொய்த்தால் வறட்சியாகவும், மழை அதிகரித்தால் வெள்ளமாகவும், விவசாயம் நாசமாய் போகிறது. இப்பொழுது கூட நிறைய இடங்களில் பயிர்கள் மழையால் வீணாகிப் போய்விட்டது. வறட்சி காலங்களில் கர்நாடகத்துடன் சண்டை மட்டுமே போட்டுக் கொண்டிராமல், நம்முடைய குளங்களையும் ஏரிகளையும் கொஞ்சம் கவனித்தால் நல்லது.

வருண பகவானின் கருணையால் கண்ட மற்றொரு பலன் – இலவச Roller coaster கள் தான். நம்முடைய சாலைகளில் பயணம் செய்வதே ஒரு தண்டனை போலாகி விட்டது. எங்கள் பகுதியில் பல லட்சங்கள் செலவு செய்து போடப்பட்ட சாலைகள், இரண்டே மாதத்தில் பள்ளமாகிப் போய் விட்டது. சாலைப் போடுகிறேன் என்று “தார்” மட்டும் ஊற்றி விட்டு பணத்தை பங்கு போட்டு கொண்டார்கள் போலும். நம்முடைய சாலை வரி, யாருக்கோ சொத்துகளை வாங்கிக் குவிக்கிறது. சாலை போடும் ஒப்பந்தக்காரரே, சில வருடங்கள் அந்த சாலையை இலவசமாக பராமரிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால் என்ன ? அந்த பயத்தில் ஓரளவுக்காவது நல்ல சாலைகளைப் போடுவார்கள். ஆனால் எல்லா ஆட்சியிலும் சாலைப் போடுபவர்கள் ஆளும் கட்சியினர் தானே ? யார் சட்டத்தை இயற்றுவது ?

Create a free website or blog at WordPress.com.
Entries and comments feeds.