காஷ்மீரின் விடுதலை – 1

June 27, 2005 at 12:01 am | Posted in வகைப்படுத்தாதவை... | 13 Comments

பள்ளியில் படிக்கும் பொழுது இந்திய வரைபடம் மிக அழகாக இருப்பதாக எனக்கு தோன்றும். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் தலைப்பகுதி தான் என்று நினைப்பேன். மிக அழகாக நெளிந்து செல்லும் அந்த வரைபடத்தில் இருக்கும் அழகான காஷ்மீருக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. ஆனால் அந்த அழகிய தலைப்பகுதியில் பெரும் பகுதி உண்மையில் நம்மிடம் இல்லை, வரைபடத்தில் மட்டும் அந்த பகுதியை சேர்த்து கொண்டு உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிந்த பொழுது கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

நம் இந்திய வரைபடத்தின் தலைப்பகுதியில் ஒரு பகுதி பாக்கிஸ்தானிடமும், மற்றொரு பகுதி சீனாவிடமும் இருக்க எஞ்சிய காஷ்மீர் சர்சைக்குரிய பகுதியாக இந்தியாவிடம் இருக்கிறது. தீவிரவாதிகளுக்கும், இராணுவத்திற்கும் நடக்கும் சண்டையில் அந்தப் பகுதி ரத்த பூமியாக மாறி அடக்குமுறை, விசாரணைகள், மனித உரிமை மீறல்கள் இவற்றுக்கிடையே காஷ்மீர் மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவும், பாக்கிஸ்தானும் கிரிக்கெட் விளையாடி தங்கள் நல்லுறவை மேம்படுத்த நினைக்க இந்த இரு நாடுகளின் உறவில் பகடை காய்களாக இருப்பது காஷ்மீர் மக்கள் தான். அவர்களின் கோரிக்கை தான் என்ன ? அவர்கள் இந்தியாவுடன் இருக்க நினைக்கிறார்களா, பாக்கிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா அல்லது சுதந்திர காஷ்மீர் வேண்டும் என்று நினைக்கிறார்களா ?

இது பற்றி யாருக்கும் கவலையில்லை. தில்லியில் இருந்து கொண்டு நாம் காஷ்மீர் எங்களுடையது என்றும், லாகூரில் இருந்து அவர்கள் காஷ்மீர் அவர்களுடையது என்றும் கூறிக் கொண்டிருக்கிறோம். நாம் காஷ்மீர் இந்தியாவை விட்டு பிரிவதை விரும்பவில்லை. பாக்கிஸ்தானும் காஷ்மீர் சுதந்திரம் அடைவதை விரும்பவில்லை. தன் நாட்டின் ஒரு பகுதியாகத் தான் காஷ்மீர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது.

நம்மிடம் உள்ள காஷ்மீரே சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்க பாக்கிஸ்தானிடம் இருக்கும் காஷ்மீரும் எங்களுடையது தான் அதனை கைப்பற்றியே தீருவோம் என்ற வீரவசனத்தை சங்பரிவார் கும்பல் வீரதுறவிகள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நடைமுறையில் சாத்தியம் இல்லாதது, போர் மூலம் பாக்கிஸ்தானை வென்று அந்தப் பகுதியை எல்லாம் கைப்பற்ற முடியாது என்று தெரிந்தாலும், மதவெறியை தூண்டுவதற்கும், அதன் மூலம் பா.ஜ.க. வின் ஓட்டு வங்கி பெருகுவதற்கும் இந்தப் பேச்சு அவர்களுக்கு உதவுகிறது. இப்படியே இது அரசியலாகி, நாட்டின் முக்கிய தீவிரவாத, கொளரவ பிரச்சனையாகி விட்டது.

உண்மையில் காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது தானா ? இது பற்றி படிக்க தொடங்கிய பொழுது காஷ்மீர் பிரச்சனையை இந்தியா கையாண்ட விதம், ஒரு இந்தியனான என்னாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை. சுருக்கமாக கூறினால் காஷ்மீர் பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து விடுதலை பெற்று இந்தியாவின் பிடியில் சிக்கிக் கொண்டது என்பது தான் உண்மை. இந்தப் பிரச்சனையின் உண்மை நிலையை இந்தியா அரசு இயந்திரமும், ஊடகங்களும் மூடி மறைக்கவே நினைக்கின்றன. பொய்ச் செய்திகளும் திட்டமிட்டு பரப்ப படுகின்றன.

1947ல் இந்தியா விடுதலையான பொழுது இந்தியா, பாக்கிஸ்தான் என்ற இரு நாடுகளுடன் சேராமல் காஷ்மீர் தனி நாடாக இருந்தது. காஷ்மீர் மன்னர் ஹரி சிங் ஹிந்து. ஆனால் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம். அதனால் தனி நாடாக இருப்பது அவருக்கு வசதியாக இருந்தது. பிரச்சனையும் இல்லை. காஷ்மீர் மற்றும் பாக்கிஸ்தான் இடையேயான சாலைகள், வர்த்தகம் போன்றவற்றை இருக்கும் நிலையில் அப்படியே பராமரிக்க பாக்கிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார் (standstill agreement ). ஆனால் இந்தியாவுடன் அவர் இது போன்ற ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வில்லை.

இந்தியா காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ள நினைத்தது. அதனால் இத்தகைய ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

1947ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாக்கிஸ்தானின் பஸ்தூன் பழங்குடிகள் காஷ்மீர் மீது படையெடுத்த பொழுது, ஸ்ரீநகரில் இருந்து தப்பி ஜம்மு வந்து இந்தியாவின் உதவியை நாடிய ஹிரி சிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒரு ஒப்பந்தத்தை 1947ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி செய்து கொண்டார் (Instrument of Accession). இந்த இணைப்பு ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தாலும், பாதுகாப்பு, வெளியுறவு, போன்ற துறைகள் மட்டும் தான் மைய அரசிடம் இருக்கும். எஞ்சிய துறைகள் காஷ்மீர் அரசின் வசம் இருக்கும்.

1947, அக்டோபர் 27ம் தேதி இந்திய படைகள் ஸ்ரீநகரில் நுழைந்தன. காஷ்மீர் இந்தியா வசம் வந்தது. காஷ்மீரின் நிலப்பரப்பில் 3ல் 2 பங்கு இந்தியாவிடமும், பாக்கிஸ்தான் கைப்பற்றிய 1 பங்கு ஆஸாத் காஷ்மீர் என்று பாக்கிஸ்தானிடமும் உள்ளது.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததை பாக்கிஸ்தானும், காஷ்மீரின் பெருவாரியான முஸ்லீம் மக்களும் ஏற்கவில்லை. தன்னிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் மன்னர் ஹரி சிங்கிற்கு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க எந்த அதிகாரமும் இல்லை என்று பாக்கிஸ்தான் வாதிட்டது. மேலும் பெருவாரியான காஷ்மீர் முஸ்லீம்கள் பாக்கிஸ்தானுடன் இணையவே விரும்பியதும், பாக்கிஸ்தானின் வாதத்திற்கு வலுசேர்த்தது.

அப்பொழுது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் இந்த இணைப்பு தற்காலிகமானது தான் என்றும், காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ அவர்கள் இணைந்து கொள்ள ஒரு ஓட்டெடுப்பு நடத்தி காஷ்மீரின் மக்களின் விருப்பத்திற்கேற்ப சுயநிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தார். இதனை காந்தி, நேரு போன்ற தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

1948ம் ஆண்டு இந்தியா இந்தப் பிரச்சனையை ஐ.நா. சபையிடம் முறையிட்டது. காஷ்மீரில் ஒட்டெடுப்பு நடத்தப்பட்டு அம் மக்களின் விருப்பத்திற்கேற்ப காஷ்மீர் இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணையலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை இந்தியாவும், பாக்கிஸ்தானும் ஒப்புக் கொண்டனர். இன்று வரை அந்த ஓட்டெடுப்பு – Plebiscite நடத்தப்படவே இல்லை.

இடைக்கால ஏற்பாடாக மார்ச் 5, 1948ம் ஆண்டு, சேஷக் அப்துல்லா காஷ்மீரின் “பிரதமராக” நியமிக்கப்பட்டார். ஆம்…ஆரம்ப காலங்களில் காஷ்மீரின் முதல்வரை பிரதமர் என்று அழைப்பது தான் வழக்கம். இந்தியாவிற்கு தனி அரசியல் சாசனம், காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம் என்பதும் வழக்கில் இருந்தது. அதாவது இந்தியாவின் பாதுகாப்பில் காஷ்மீர் “தனி நாடாக” சுயாட்சியுடன் இருந்தது. மற்ற மாநிலங்கள் போல இல்லாமல் காஷ்மீருக்கு என்று தனி அரசியல் சாசனம் இருக்க வாய்ப்பளிக்கும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தரும் 370ம் சட்டப்பிரிவும் உருவாக்கப்பட்டது.

1951ம் ஆண்டு காஷ்மீரின் முதல் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை தான் இந்தியா, ஒட்டெடுப்புக்கு இணையாக கூறிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் இந்தியாவின் ஆதரவு பெற்ற சேஷக் அப்துல்லா வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 75 இடங்களிலும் சேஷக் அப்துல்லா வெற்றி பெற்றார். இதில் 73 இடங்களில் சேஷக் அப்துல்லாவின் ஆதரவாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். எஞ்சிய இரு தொகுதிகளிலும் அப்துல்லாவின் எதிர் போட்டியாளர்கள் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்கள். அதனால் மொத்தமுள்ள அனைத்து தொகுதிகளிலும் சேஷக் அப்துல்லா வாகை சூடிக் கொண்டார்.

ஆனால் உண்மையில் காஷ்மீர் மக்கள் இந்த தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. தேர்தலை புறக்கணித்தனர். அது மட்டுமில்லாமல் தேர்தலும் முறையாக நடக்க வில்லை. மைய அரசின் உதவியுடன் சேஷக் அப்துல்லாவின் எதிர்ப்பாளர்களாக கருதப்பட்டவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தத்தில் சேஷக் அப்துல்லாவின் வெற்றிக்கு காஷ்மீர் மக்களின் ஆதரவை விட மைய அரசின் அதரவு தான் முக்கிய பங்கு வகித்தது. இதற்கு முழு காரணம் அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர் லால் நேரு. ஆம்.. முறையற்ற தேர்தலை இந்தியாவிற்கு அறிமுகம் செய்த பெருமை நேருவையே சாரும். ஏன் நேரு இதனை செய்தார் ? பிறகு பார்க்கலாம்.

காஷ்மீரின் பிரதமராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பின்பு, இந்தியாவுடனான இணைப்பிற்கு எதிராகவும் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என்றும் சேஷக் அப்துல்லா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அது குறித்தும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் தீர்மானத்தை காஷ்மீரின் சட்டசபையில் நிறைவேற்ற மறுத்தார். இதனால் 1953ம் ஆண்டு சேஷக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். நேருவின் நெருங்கிய நண்பராக இருந்த அப்துல்லா, நேருவாலேயே கைது செய்யப்பட்டார்.

சேஷக் அப்துல்லாவிற்கு பிறகு காஷ்மீரின் பிரதமராக பக்ஷி குலாம் முகம்மது என்பவர் இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். காஷ்மீரின் சட்டசபையும் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன் பிறகு சாதிக் என்பவர் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் பிரதமராக இருந்த பொழுது காஷ்மீரின் பிரதமர், ஜனாதிபதி என்று அழைக்கும் வழக்கம் மாறி முதலமைச்சர், கவர்னர் என்று அழைக்கும் முறை அமலுக்கு வந்தது. இவ்வாறு காஷ்மீர் படிப்படியாக இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் ஜவகர்லால் நேரு தான்.

ஆரம்ப காலங்களில் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணயம், காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப தங்களை இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணைத்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்த ஜவகர்லால் நேரு, பிறகு அதனை மாற்றிக் கொண்டு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார். பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய நேரு, காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கெதிராக அவர்களின் நாட்டை எதனால் இந்தியாவுடன் இணைக்க ஆர்வம் காட்டினார் ?

இதற்கு முக்கிய காரணம் காஷ்மீரை சார்ந்த அவருடைய பாரம்பரியம். காஷ்மீரி பண்டிட்களின் பூர்வீகமான காஷ்மீரை பாக்கிஸ்தானுக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. தன்னுடைய பூர்வீக பூமியை தன்னுடன் வைத்துக் கொள்ள பெரும்பான்மையான காஷ்மீர் முஸ்லிம்களின் விருப்பத்தை துச்சமாக நினைத்தார். இதற்காக அவர் தேர்தல் முறைகேடு போன்றவற்றையும் கையாண்டார். 1951 தேர்தல் தொடங்கி இன்று வரை காஷ்மீர் மக்களின் உண்மையான ஆதரவு பெற்ற தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை. இந்திய அரசின் ஆதரவு பெற்ற தலைவர்கள் தான் காஷ்மீரில் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு ஆரம்பித்த காஷ்மீர் பிரச்சனை தான் இன்று காஷ்மீர் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வழிவகுத்துள்ளது. பாக்கிஸ்தானின் தூண்டுகோள் இருக்கிறது என்றாலும் அவர்களின் போராட்டம் நியாயமற்றது அல்ல.

காஷ்மீர் பிரச்சனைக்கு காரணம் நேருவின் பொறுப்பற்ற, சுயவிருப்பத்தால் எழுந்த தவறு தான். வரலாற்றின் முன் இந்த பிரச்சனையின் குற்றவாளி ஜவகர்லால் நேரு தான். அவர் இந்த பிரச்சனையை கையாண்ட விதம் தான் இன்றைக்கு இது ஒரு மிகப் பெரிய தீவிரவாத பிரச்சனையாக உருவாக காரணம்.

இந்த பிரச்சனையின் காரணமாக இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் நடந்த 4 போர்கள், அதில் மடிந்த உயிர்கள், தினமும் மடியும் மனித உயிர்கள், காஷ்மீர் மக்களின் இன்னல், இந்திய இராணுவத்திற்கு இந்த பிரச்சனையின் காரணமாக செலவிடப்படும் பெரும் தொகை என்று இன்றைக்கும் இந்தப் பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அது மட்டுமில்லாமல் இன்று இது தேசத்தின் கொளரவ பிரச்சனையாகி தீர்வு காண முடியாத சிக்கலான விடையமாகி விட்டது. 1948ல் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய பிரச்சனை 2005 வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களின் நிலை தான் பரிதாபமானது. அவர்களுக்கு வேண்டியது நிம்மதியான வாழ்க்கை. காஷ்மீர் இரண்டாக துண்டிக்கப்பட்டதால் பக்கத்து ஊர்களில் கால்நடையாக சென்று தங்கள் உறவினர்களை பார்த்து விடக் கூடிய தூரத்தில் இருந்த காஷ்மீர் மக்கள் தூண்டிக்கப்பட்டு விட்டனர். தங்கள் உறவினர்களை இன்று பாஸ்போர்ட், விசா போன்றவற்றை பெற்று தான் பார்க்க வேண்டிய நிலை. அதை பெறுவதற்கு தேவைப்படும் பணம். பெறுவதில் உள்ள சிக்கல். குறைந்தபட்சம் தங்கள் சொந்தங்களை சுலபமாக பார்க்க கூடிய சலுகையையாவது எதிர்பார்க்கின்றனர்.

பாக்கிஸ்தான் அதிபர் முஷ்ரப் இந்த பிரச்சனையை மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் பொழுதே தீர்த்து விட வேண்டும் என்று கூறுகிறார். இந்தப் பிரச்சனை தீர்க்க கூடிய பிரச்சனை தானா ? என்ன தீர்வு உள்ளது இந்தப் பிரச்சனைக்கு ?

அடுத்த பதிவில் எழுதுகிறேன்

பொருள் தேடும் வாழ்க்கையில்…

June 12, 2005 at 10:49 am | Posted in வகைப்படுத்தாதவை... | 6 Comments

சென்னையை விட்டு நியூஜெர்சி வந்து ஒரு மாதம் கழிந்து விட்டது. சென்னை டிராப்பிக்கில் புகையை நுகர்ந்து கொண்டு அலுவலகத்துக்கு செல்லும் பிரச்சனை இல்லை. கத்ரி வெயிலின் கொடுமை இல்லை. ரம்மியமான குளிர். தூசி, புகையில்லை. அறையின் ஜன்னலின் இருந்து வெளியே பார்த்தால் மிக எழிலாக ஹட்சன் நதி. அதில் வேகமாய் செல்லும் படகுகள், சின்ன படகுகளில் சீறிக் கொண்டிருக்கும் வார இறுதி விளையாட்டுகள். இரட்டை கோபுரங்களுடன் கம்பீரமாக நின்று கொண்டிருந்த மேன்ஹாட்டனுக்கு பதிலாக பொலிவிழந்து சூம்பிக் கொண்டு ஆனாலும் பார்க்க ஆவலை தூண்டும் விளக்குகளுடன் ஆற்று கரையோரத்தில் தென்படும் அழகான மேன்ஹாட்டன். ஸ்டார்பக்ஸ் காபியுடன் (ம்… நம்வூர் நாயர் கடை காபிக்கு இது ஈடாகுமா ? ) ஆற்றின் அழகை ரசிக்கும் பொழுது அதற்கு மேலும் ரசம் சேர்க்கும் வகையில் வேகமாய் சறுக்கிக் கொண்டு சக்கரங்களில் பல அழகுகளை அள்ளித் தெரித்து விட்டுச் செல்லும் அழகான சீனப் பெண். ஓரமாக ஆற்றின் அழகை மறந்து தன் பெண் நண்பியின் உதட்டிலும், முகத்திலும் தன் உதட்டை கொண்டு எதையோ ஆராய்ச்சி செய்து என்னை எரிச்சல் பட வைக்கும் கறுப்பு இளைஞன். மேன்ஹாட்டனையும், சுதந்திர தேவி சிலையையும் பாதுகாத்தே தீர வேண்டும் என்ற உத்வேகத்துடன் விடாமல் வானத்தை வட்டமிட்டு கொண்டே இருக்கும் ஹெலிகாப்டர். எல்லாம் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் மனதில் தான் ஏதோ வெறுமையான உணர்வு.

சென்னையின் வேர்வை கசகசப்பில் இருந்த ஆனந்தம் இங்கு இல்லாதது போன்ற பிரமை. காலையில் சில ரொட்டித் துண்டுகளை வெண்ணையுடன் சேர்த்து சாப்பிட்டது போக மதியம் ஏதையோ ஒன்றை கிளறி வயிற்றில் தள்ளி விட்டு சோம்பலாக சந்திரமுகியை இணையத்தில் இரண்டாவது தடவையாக பார்த்து விட்டு (திருட்டு வீசிடிக்கு பதிலாக திருட்டு இணையமா ? என்ன செய்யப் போகிறார் திரையுலகை காக்க அவதரித்த அகிலாண்டேஸ்வரி ? ) தினமும் ரசிக்கும் அதே ஆற்றின் கரையோரம் வந்து விட்டேன்.

வாழ்க்கையே பொருள் தேடுவதற்கு தான் என்று முடிவு செய்த பிறகு அந்த பொருளை திரைகடலோடி தேடும் தமிழனின் பொருளாதார தேடல் இணையத் தமிழ் வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. குடும்பமும், சொந்தங்களும், நண்பர்களும் எங்கோ பல ஆயிரம் மைல் தூரத்தில் இருக்க நாம் மட்டும் இங்கு வந்து சேர நேர்ந்தது எதன் பொருட்டு ? நம்மிடம் மட்டும் நிறைய பணம் (நிறைய என்பதன் இலக்கு மாறிக் கொண்டே இருப்பதால் தான் பிரச்சனை) இருந்திருந்தால் இங்கு வந்திருக்க நேர்ந்திருக்காதே என்ற எண்ணமும் சில நேரங்களில் தோன்றும். நிறைய சம்பாதித்து விட்டு சீக்கிரமாக இங்கிருந்து சென்று விட வேண்டும். இது நமக்கான தேசம் அல்ல என்றும் நினைப்பேன். இப்படியே புலம்பிக் கொண்டு பல வருடங்களாக இங்கேயே இருக்கும் சில நண்பர்களின் முகங்களும் அப்பொழுது ஞாபகத்திற்கு வரும். நாம் அப்படி இருந்து விடக் கூடாது என்றும் நினைத்துக் கொள்வேன்.

கல்லூரி முடித்து விட்டு வேலை தேடும் படலத்தில் இருந்த நேரத்தில் ஒரு 5000 ரூபாய் கிடைத்தால் போதும் என்று தோன்றியது. பிறகு 10,000 சம்பளம் வேண்டும் என்று மனம் ஆசைப்பட்டது. 15,000 ரூபாய் கிடைத்த பொழுதும், அடுத்த இலக்காக 20,000 வேண்டும் என்று தோன்றியது. சம்பளம் அதற்கு மேலும் பெருகிய பொழுதும் தேவைகள் மட்டும் குறையவே இல்லை. போதும் என்ற எண்ணம் மனதிற்கு தோன்றுவதே கிடையாது. அடுத்த இலக்குகளை நோக்கி மனம் சென்று கொண்டே இருக்கிறது.

பணமும் நிறைய வேண்டும். அதுவும் சீக்கிரமாக பெற வேண்டும் ? என்ன செய்யலாம் ? ஏறு விமானத்தில், இறங்கிடு அமெரிக்க திரு நாட்டில் என்ற தத்துவம் நிலைக்க பெற்ற மென்பொருள் துறையில் நான் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன ? இதோ இங்கே வந்து சேர்ந்து விட்டேன். ஆனால் பொருள் மட்டும் தான் வாழ்க்கையா ?

நிதி சம்பந்தமான வேலையில் இருப்பதால் இரவில் நம்மதியாக தூங்க கூட முடிவதில்லை. சென்ற வாரம் நண்பர்களுடன் ஓட்கா அருந்தி கொண்டு உற்சாகமாக இருக்கும் வேளையில் இந்தியாவில் இருக்கும் Offshore Production Support டீமில் இருந்து போன், சர்வர் காலி. ஒட்கா அடித்த மப்பு எல்லாம் பறந்து போய் வேலையில் இறங்க வேண்டியது தான். இந்தியாவில் 8 மணி நேரம் முடிந்ததா, வீட்டிற்கு கிளம்பினோமா என்று இருந்த நிலை மாறி, பீப்பர், ப்ளாக்பெரி, வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது என்று ஒரே இம்சை மயமான வாழ்க்கை. மற்றொரு நாள், அதிகாலை இரண்டு மணிக்கு தொலைபேசி அலறியது. க்ளயண்டுகளின் சில Exposure எகிறி விட்டது என்று அலறல். எழுந்து சரி செய்து விட்டு 3:30 மணிக்கு படுத்தால் 5மணி வரை தூக்கம் வர வில்லை. திடீரென்று விழிப்பு வந்த பொழுது மணி 8. அலறி அடித்து எழுந்து, ரயில் பிடித்து அலுவலகம் சென்று… வாழ்க்கையா இது ?

சென்னையில் 7 மணி வரைக்கும் நன்றாக தூங்கி, 9:45 மணி வரை சந்தை செல்லும் போக்கு குறித்து பார்த்து விட்டு 10 மணிக்கு அலுவலகம் சென்று கொஞ்ச நேரம் சந்தையில் ஆழ்ந்து விட்டு, 11 மணிக்கு ஒரு காபி, 12:30 மணிக்கு அலுவலகத்தில் லஞ்ச், பிறகு தமிழ்மணம், எக்னாமிக் டைம்ஸ் என்று அனைத்தையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, என் டீம் மெம்பர்கள் கொடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்து கொண்டிருக்கிறார்களா என்று கண்காணித்து விட்டு, மறுபடியும் காபி என்று சகமாக இருந்த வாழ்க்கை ஏனோ ஞாபகத்தில் வந்து போகிறது.

இன்று வீட்டிற்கு தொலைபேசினால் மனைவி அழுகிறாள். விசா முதற்கொண்டு எல்லாம் கையில் இருந்தும் அவளை உடன் அழைத்து வர இயலாத சூழ்நிலை. தினமும் தொலைபேசி, சாட் என்று அவளை சமாதானம் செய்யும் பொருட்டு ஒரு அரை மணி நேரமாவது பேச வேண்டும். ஒன்றும் உருப்படியாக பேசவில்லையெனினும், ஒரு அரை மணி நேரம் பேசினால் தான் மனம் ஆறுதல் அடைகிறது. அதே நினைவில் சிறிது நேரம் ஆழ்ந்து விட்டு எழுந்தால் மனதை ஏதோ பாரம் அழுத்துகிறது. அம்மா நீ எப்படி தான் அங்கு இருக்கிறாயே என்று கவலையுடன் துக்கமாக பேசும் பொழுது கண்ணீர் எட்டி பார்க்கத் தான் செய்கிறது. ஆனாலும் பொருளை தேடி ஓடும் வாழ்க்கை ஓட்டத்தில் இதனை எல்லாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை. தினமும் மனைவி, அம்மா, அப்பா, தம்பி, பாட்டி என்ற அனைவரின் முகமும் வந்து போகிறது. எப்பொழுது சென்னைக்கு செல்வோமோ என்ற உணர்வு அடிக்கடி தோன்றுகிறது.

இதே நிலை தான் நண்பர்கள் பலருக்கும். என்னுடைய நண்பன் ஒருவன் தன் மனைவியையும், ஒரு வயது கூட நிறைவடையாத மகளையும் விட்டு விட்டு இங்கு வரநேர, தினமும் புலம்பி தீர்த்து விடுவான். அவன் இங்கு மூன்று மாதம் தான் இருக்க வேண்டும். தினமும் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பான். ஆனால் நான் ஒரு வருடம் இருக்க வேண்டுமே ? நாட்கள் மெதுவாக நகருவது போன்ற பிரமை.

ஒவ்வொருவர் வாழ்விலும் பொருள் குறித்து பல்வேறு தேவைகள். அதற்காக சில சமரசங்களை செய்ய கொள்ள வேண்டிய நிலை. சுகங்களை இழக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

இந்தியா பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற்றிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காதே என்ற எண்ணம் தோன்றத் தான் செய்கிறது. ம்… என்ன செய்ய ?

கலைஞர் அரசியலில் இருந்து விலக வேண்டும் !!!

June 11, 2005 at 2:18 pm | Posted in வகைப்படுத்தாதவை... | 12 Comments

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் ? ஜெயலலிதாவா, கலைஞரா ?

தன்னுடைய இறுதிக்காலத்தில் எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விட வேண்டும் என்ற கலைஞரின் துடிப்பு எனக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. பத்தாண்டுகளுக்கு மேல் அந்த பதவியில் அமர்ந்த பிறகும் அதனை மறுபடியும் அடைய வேண்டும் என்ற அவரது ஆசை ஆச்சரியம் தான் என்றாலும் இந்திய அரசியலில் புதிது அல்ல.

அரசியல்வாதிகள் பதவிகளை நாடி ஓடுவது இயற்கையான ஒன்று தான். அதனால் தான் சோனியா காந்தி இந்தியாவின் பிரதமர் பதவியை தூக்கி எறிந்த பொழுது அது மிகப் பெரிய தியாகமாக தெரிந்தது. ஒரு இந்திய அரசியல்வாதி பதவியை துச்சமென மதித்ததை அப்பொழுது தான் முதன் முறையாக பார்த்தேன். சோனியா இந்தியாவில் அரசியல் செய்தாலும், இந்தியர் இல்லையே. எனவே தான் அவரால் அவ்வாறு சிந்திக்க முடிந்தது. ஒரு சராசரி இந்திய அரசியல்வாதியால் பதவியை இவ்வாறு தூக்கியெறிய முடியாது என்றே நினைத்தேன்.

கலைஞர், ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், திருமாவளவன் என தமிழகத்தில் இருக்கும் பல தலைவர்களும் சரி, தமிழகத்தில் மக்கள் செல்வாக்கை அபரிதமாக பெற்றிருந்த எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களும் சரி மக்களுக்காக உண்மையில் என்ன செய்தார்கள் ? எந்த கொள்கையை பின் பற்றுகிறார்கள், எதனை விட்டுச் செல்லப் போகிறார்கள் ?

இந்த லட்சணம் இந்தியாவெங்கும் பரவிக்கிடக்கிறது. அத்வானி, நரேந்திரமோடி, லல்லு, முலாயாம், மாயாவதி, பாஸ்வான் என்று எங்கு நோக்கினும் பதவிவெறியர்கள் தான். ஆட்சியில் இருந்த வரை தன் மாநிலத்தை முன்னேற்ற நினைக்கும் ஒரு தேர்ந்த நிர்வாகியாக தெரிந்த சந்திரபாபு நாயுடு, பதவியில் இருந்து விலகிய பிறகு பேருந்துகளை மாநிலமெங்கும் தீவைத்து எரித்து தன் கட்சி தொண்டர்கள் செய்த கலவரங்களை நியாயப்படுத்தியது, இந்திய அரசியல்வாதிகள் எல்லோரும் ஒரே சாதி தான் என்பதை நிருபித்தது.

என்னைப் போன்ற இக் கால தலைமுறையை கலைஞர் போன்ற மூத்த தலைவர்கள் பாதித்து இருக்கிறார்களா ? அவர்களுடைய கொள்கை பிடிப்பு, வாழ்க்கை நெறிகள் நாங்கள் பின்பற்ற தகுந்த அளவிலே இருக்கிறதா ? இளையதலைமுறைக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் இத் தலைவர்கள் விட்டுச் செல்லும் சித்தாந்தம் என்ன ?

தந்தை பெரியார், காமராஜர் போன்றோரை இந்தப் பட்டியலில் கொண்டு வர நான் விரும்பவில்லை. ஆயினும் என்னை வியக்க வைத்த தலைவர்கள் என்னும் பொழுது கக்கன் போன்றோர் தான் ஞாபகத்தில் வருகிறார்களே தவிர மக்களின் பெரும் ஆதரவை பெற்ற தலைவர்கள் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை.

ஹிந்தி திணிப்பிற்கு எதிராக இருந்த மொழி உணர்வை கொண்டு ஆட்சி பீடம் ஏறிய திமுகவும் கலைஞரும் இது வரை தமிழுக்காக என்ன செய்தார்கள் ? ஹிந்தி எதிர்ப்பின் பொழுதும் பின்பு தேவைப்பட்ட பொழுதெல்லாம் ஹிந்தி பெயர் பலகைகளை தார் பூசி அழித்து, மைய அரசுக்கு எதிராக மொழி உணர்வை வளர்த்த கலைஞர், இன்று மைய அரசில் அங்கம் அகிக்கும் நிலையை அடைந்த பிறகு தன்னுடைய துறை அமைச்சர் இருந்த அமைச்சகமே தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் எல்லாம் பெயர் பலகைகளில் ஹிந்தியால் ஊர் பெயர்களை எழுதியதை வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு தானே இருந்தார். எந்த கொள்கையை முழக்கமிட்டாரோ, அதே கொள்கையை இன்று குழிதோண்டி புதைத்து விட்டார்.
இது தமிழுக்கும், தமிழர்களுக்கும் நேர்ந்த அவலம்.

தன்னுடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்த தான் கைப்பற்றிய பதவி உதவவில்லை என்றால் அந்த பதவியை துச்சமென மதித்து தூக்கி ஏறிந்திருக்க வேண்டும். அல்லது தான் முழக்கமிட்ட கொள்கைகளுக்காக அரசின் கொள்கைகளை மாற்ற துணிந்து தோல்வி அடைந்திருந்தால் கூட நான் கலைஞருக்கும் திமுகவுக்கும் தலைவணங்கியிருப்பேன். மாறாக தமிழுக்காக தீக்குளித்து மாண்டு போன அக் கால மாணவர்களின் சாம்பலில் ஆட்சிபீடம் ஏறிய திமுக அந்த தியாகிகளின் தியாகங்களை கேலிக்கூத்தாக்கிய சம்பவத்திற்காக கலைஞரை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்விக்காகவோ, கோயில்களில் பல நூறு ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சமஸ்கிருதத்தை மாற்றவோ, தமிழின் வளர்ச்சிக்காகவோ கலைஞர் தன்னுடைய நீண்ட அரசியல் வாழ்வில் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவ்வளவு ஆண்டுகள் கடந்தும் இன்றும் இவை நடைமுறைப்படுத்த முடியாமல் போனதன் காரணம் என்ன? நீதிமன்றத்தில் முடங்கிப் போன தமிழ் சார்ந்த வழக்குகளை போராடி வென்றிருக்க வேண்டாமா ? போராடி வெல்ல வேண்டிய கொள்கைகள் அல்லவா அவை ? எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது மட்டும் இதற்காக போராட்டம் நடத்தி விட்டு ஆளுங்கட்சியானவுடன் இவற்றை மறந்து போனதால் தானே இந் நிலை ஏற்பட்டது.

தமிழினத்தின் ஒரே தலைவர் என்ற புகழுரைக்கு ஆசைப்படும் கலைஞர், தன்னுடைய தமிழ் இனம் அண்டை நாட்டில் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கிறது என்பது பற்றி சிறிதும் அக்கறை கொள்வதில்லையே ? தமிழீழத்தின் விடுதலைக்கு ஆதரவு கொடுக்காமல் மொளனம் சாதிக்கிறார். மைய அரசின் கூட்டணி ஆட்சியில் முக்கிய பங்கு வகித்தும் இலங்கை அரசுக்கு இந்தியா செய்யும் இராணுவ உதவிகளை எதிர்க்காமல் இருக்கும் கலைஞருக்கு எப்படி தமிழினத்தின் தலைவர் என்ற பட்டம் எப்படி பொருந்தும் ?

பத்தாண்டுகளுக்கு மேல் தமிழகத்தின் முதல்வராக கலைஞர் சாதித்தது என்ன ? தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறதா ? இன்னமும் மின்சாரம், குடிநீர், சாலைகள் போன்ற அடிப்படை வசதி கூட இல்லாத கிராமங்கள். கூரைகள் இல்லாமல் குட்டிச்சுவராக இருக்கும் பள்ளிகள். எலிக் கறி சாப்பிட நேர்ந்த தஞ்சை விவசாயிகளின் ஏழ்மை. காவிரி பிரச்சனையை அரசியலாக்கியவர்கள் தமிழகத்தின் நீர் ஆதாரங்களை பெருக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் 1200 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்ட வீராணம் ஏரியை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அவலம்.

இதற்கெல்லாம் கலைஞரை மட்டுமே குற்றம்சொல்ல முடியாது என்றாலும் ஒரு மூத்த தலைவராக இதனை சரி செய்ய அவர் என்ன திட்டங்களை கொண்டு வந்தார் ? மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்ற எந்த உருப்படியான திட்டங்களையும் கொண்டு வராமல் பல ஆண்டுகளை வீணடித்த நம் நாட்டின் அரசியல்வாதிகளில் கலைஞரும் ஒருவர்.

இது வரை ஆட்சியில் பெரிய சாதனைகளை நிகழ்த்தாத கலைஞர் இனியும் ஆட்சிபீடம் ஏறி என்ன சாதிக்க நினைக்கிறார் ? அது வெறும் பதவி ஆசையாகத் தான் எனக்கு தெரிகிறது. தேவையான அளவு பதவியை சுவைத்தாகி விட்டது. அடுத்த தலைமுறைக்கு கலைஞர் வழி வகுக்க வேண்டும். தன்னுடைய அரசியல் வாரிசான மு.க.ஸ்டாலினையோ, ஆசை பேரன் தயாநிதி மாறனையோ தமிழக முதல்வர் பதவியில் அமர்த்தி விட்டு கலைஞர் அரசியலில் இருந்து விலகலாம். அரசியலில் இருந்து ஓய்வு பெற்று தொல்காப்பிய பூங்கா, திருக்குறள் உரை போன்று பல புத்தகங்களை எழுதி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும்.

Blog at WordPress.com.
Entries and comments feeds.