சுனாமி : பொருளாதார பாதிப்புகள்

December 30, 2004 at 11:47 am | Posted in வகைப்படுத்தாதவை... | Leave a comment

பல்லாயிரம் பேரின் உயிரைப் பலி கொண்ட சுனாமி, ஆசியாவில் சுமார் 14 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளின் சுற்றுலாத் துறைக்கு கடும் சேதத்தை விளைவித்து விட்டது. இலங்கை, மாலத்தீவுகள் போன்ற நாடுகளின் பொருளாதாரம் சுனாமியால், வரும் நாட்களில் கடும் சோதனைகளை எதிர் கொள்ளும். ஆனால் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தான் பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

பல ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போர்களுக்குப் பிறகு, விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட போர் நிறுத்தத்திற்குப் பிறகு தான் இலங்கைப் பொருளாதாரம் முன்னேறத் தொடங்கியது. சமீப காலங்களில் தான் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இலங்கைக்கு வரத் தொடங்கியிருந்தனர். இனி அவர்களது வரவு குறைந்துப் போகக் கூடும். சுற்றுலாத் துறையை பெரிது நம்பி இருக்கும் இலங்கைக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். சுற்றுலாத் தளங்களான கடற்கரை ரிசார்டுகள், சின்னாபின்னமாகி விட்ட சாலைகள், ரயில் போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்றவை சரி செய்யப்பட ஏராளமான நிதி, கால அவகாசம் தேவைப்படுகிறது. சுனாமி, இலங்கைப் பொருளாதார வளர்ச்சியை சில வருடங்கள் பின்நேக்கி தள்ளக் கூடும்.

இலங்கையின் மற்றொரு முக்கிய ஏற்றுமதி தொழில், ஜவுளி. 2005ம் ஆண்டில் இருந்து ஜவுளித் துறையில் கோட்டா முறை விலக்கப்படுகிறது. ஜவுளித் துறையில் வளர்ச்சி அடைந்து விட்ட இந்தியா, சீனா போன்ற நாடுகளின் கடும் ஏற்றுமதி போட்டியை இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இலங்கைப் பொருளாதாரத்திற்கு விடுக்கப்பட்ட இந்த சவால் போதாதென்று இப்பொழுது சுனாமி வேறு சேதம் விளைவித்து விட்டது.

சுற்றுலாத் துறையை நம்பியிருக்கும் மற்றொரு நாடான மாலத் தீவிலும் இதே நிலைமை தான். மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சியே சுற்றுலாத் துறையை நம்பி தான் உள்ளது. அந் நாட்டிற்கு கிடைக்கும் அந்நியசெலவாணியில் அரைப் பங்கு சுற்றுலாப் பயணிகள் மூலம் தான் வருகிறது. சுனாமி அந் நாட்டு பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.

இந்தியாவைப் பொறுத்த வரை சுனமியால் சுமார் 5000 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மீன்பிடித் தொழில், சுற்றுலா, கப்பல் போக்குவரத்து போன்றவை அதிகம் பாதிப்புக்குள்ளாகும். வெளிநாட்டுக்கு அதிகம் ஏற்மதியாகும் இறால், மற்றும் மீனவர் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சுமாராக 2000 கோடி இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. சமீப காலங்களில் தான் கப்பல் போக்குவரத்து, ஹோட்டல் தொழில் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது. சுனாமி அனைத்தையும் சிதைத்து விட்டது. இன்று கூட பங்குச் சந்தையில் ஹோட்டல்
பங்குகள், கப்பல் நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவுற்றுள்ளது. ஆனால் இந்தத் துறைகள் எல்லாம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்க கூடியவை அல்ல. அதனால் இந்திய பொருளாதாரம் இந்த இழப்புகளை தாங்கிக் கொள்ளும். சில மாதங்களில் இந் நிலைமை சரியாகிவிடும் என்றே எதிர்பர்க்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக புனர்வாழ்வு அமைத்து தருவது தான் தற்போதைய பெரிய சவால். தற்போதைய நிலவரப் படி சுமார் இரண்டாயிரம் கோடி இதற்காகத் தேவைப்படும். வருமான வரியில் கல்விக்காக விதிக்கப்படும் செஸ் (cess) வரிப் போல நிவாரணப் பணிக்காக 1% செஸ் வரி விதிக்கப் படும் சாத்தியக் கூறுகள்
உள்ளது. இதன் மூலம் சுமார் 1400 கோடியை திரட்ட முடியும். இது மட்டுமின்றி பல நிறுவனங்களும், மக்களும் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து கொண்டே இருக்கின்றனர். இதிலும் கணிசமாக நிதி திரட்ட முடியும்.

இந்தியா, குஜராத் போன்ற பூகம்ப காலங்களில் எப்படி வெளிநாட்டு உதவி தேவையில்லை என்று கூறி வந்ததோ அது போலவே இம்முறையும் வெளிநாட்டினரின் உதவி தேவையில்லை என்று உறுதியாக தெரிவித்து விட்டது. இந்தியாவால் இந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியும் என்று பிரதமர் மன்மோகன் சிங் இன்று மறுபடியும் தெரிவித்தார். நம் தேவையை நாமே கவனித்து கொள்கிற அதே நேரத்தில் இலங்கைக்கு ஏராளமான உதவியை இந்தியா செய்து கொண்டிருக்கிறது. சுமார் 100 கோடி இலங்கைக்கு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது (நமக்கு இதைக் கேட்டால் வேதனை தான் ஏற்படுகிறது. நம்முடைய வரிப்பணம் இலங்கையில் உள்ள நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு உதவாமல் யாருக்கோ போகிறது )

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுலப கடன் திட்டமும், ஏற்கனவே கடன் வாங்கியுள்ளவர்களுக்கு கடன் காலத்தை நீட்டிக்கவும், காப்பீடு செய்தவர்களுக்கு காலதாமதம் செய்யாமல் உடனடியாக காப்பீட்டு தொகை வழங்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொழில் சார்ந்த கட்டுமானங்களான கடலில் இருந்த ONGC யின் எண்ணெய் கிணறுகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. ஆனால் சென்னைக்கு வந்த கப்பலின் கண்டெய்னரில் இருந்த 1200 ஹுண்டாய் கார்களில் நீர்
புகுந்துள்ளது. பிரேசிலில் இருந்த வந்த சக்கரையும் கடல் கொந்தளிப்பால் கரைந்துப் போனதில் சில கோடி ரூபாய் இழப்பு ஏற்படக்கூடும். 4 கப்பல்கள் சுனாமியில் சேதமானதில் கப்பல் துறைக்கு சுமார் 200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்தத்தில் 5000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டு இருந்தாலும் சமீப காலமாக எழுச்சியடைந்து வரும் இந்தியாவின் பொருளாதாரமும் இதனை தாங்கிக் கொள்ளும்.

இலங்கை மக்கள்

December 29, 2004 at 5:15 am | Posted in வகைப்படுத்தாதவை... | 7 Comments

சுனாமியால் பாதிக்கப்பட்ட எல்லோரையும் விட மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு இலங்கை மக்களுக்கு நம்மாளான உதவிகளை மேற்கொள்ள முனைய வேண்டும். தமிழகத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும்
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசும், தொண்டு நிறுவனங்களும் பல உதவிகளை அளித்து வருகின்றன.

ஆனால் வட கிழக்கு இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலக நாடுகளின் உதவி போய்ச் சேராத நிலை மிக்க வருத்தத்தை அளிக்கிறது. பல ஆண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்ட அம் மக்களை சமாதான
காலத்திலும் நிம்மதியாக இருக்க விடாமல் இயற்கை வஞ்சிக்கிறது.

இந்தியாவில் இருந்து நேரடியாக இலங்கைக்கு, உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து outward remittance மூலமாக பணம் அனுப்ப இயலும். உங்கள் வங்கிகளை தொடர்பு கொண்டால் விபரங்கள் கிடைக்கும்.

அஞ்சலி

December 26, 2004 at 12:48 pm | Posted in வகைப்படுத்தாதவை... | Leave a comment

கடந்த காலங்களில் நில நடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் தமிழகத்தில் நடக்காது என்ற கருத்து ஆய்வாலர்களால் வலுவாகச் சொல்லப்பட்டது. நில நடுக்கமே வராது என்ற நிலையிருக்கும் பொழுது சுனாமிகளை யார் கவனிக்கப் போகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு சென்னையிலும், தமிழகத்திலும் லேசான நில அதிர்வு ஏற்பட்ட பொழுதே மற்றொரு ஆய்வை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் அதில் எந்த சேதமும் இல்லாததால் யாரும் அதைப் பற்றி யாரும் அக்கறை காட்ட வில்லை.

இந்தியாவில் ISRO சார்பாக 6 செயற்கோள்கள் இருக்கின்றன. அந்தச் செய்ற்கைக்கோள்களால் ஏன் இத்தகைய இயற்கைச் சீற்றங்களை முன் கூட்டியே அறிய முடியவில்லை ? கடலாய்வு குறித்த செயற்கைக்கேள்களும்
இருக்கின்றனவே அவை ஏன் இந்தக் கடல் தொந்தளிப்பை முன் கூட்டிய அறிய முடியவில்லை ? இந்தக் கேள்வி ISRO உயரதிகரியிடம் முன்வைக்கப்பட்டதற்கு அவர் அளித்த விளக்கம் “கடலலைகள் குறித்து ஆராயக் கூடிய எந்த செயற்கைக்கோள்ளையும் நாம் வைத்திருக்கவில்லை. அது போல செயற்கைகோள்கள் பூமியை சில நேரங்களில் தான் ஸ்கேன் செய்யும். அப்படி ஸ்கேன் செய்யும் பொழுது இத்தகைய எந்த அறிகுறிகளும் தென்படவில்லை” என்றார்.

இத்தகைய சுனாமிகளை கண்டறியும் திறன் பசிபிக் நாடுகளில் உள்ளது. ஆனால் ஆசியாவில் இல்லை. இருந்திருந்தால் உயிர்ச்சேதங்களை தடுத்திருக்கலாம் என்று BBC தொலைக்காட்சி தெரிவித்தது.

நடந்து போனவைகளைப் பற்றிக் குறைச் சொல்லிக்கொண்டிருப்பதில் எந்தப் பலனும் இல்லை. இனி என்ன செய்வது என்று தான் யோசிக்க வேண்டும்.

பல செயற்கைக்கோள்களை செலுத்தியிருக்கும் நாம் இயற்கையின் பல்வேறு சீற்றங்களையும் கண்டறிய தொழில்நுடபங்களை உருவாக்க வேண்டும். பிற நாடுகளிடம் அத்தகைய தொழில்நுட்பங்கள் இருந்தால் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். நில நடுக்கம் போன்ற சீற்றங்களை முன் கூட்டியே கண்டறிய முனைய வேண்டும்.

மகாராஜ்டிரா, குஜராத் என்று நிகழ்ந்த கோரங்களுக்கு அடுத்து தமிழகம். இனிமேலும் இத்தகைய கோரங்கள் நிகழக்கூடாது. இயற்கை சீற்றங்களை தடுக்க முடியாது. ஆனால் அதனால் ஏற்படக் கூடிய சேதங்களை சரியான தற்காப்பு நடவடிக்கை, திட்டமிடுதல் மூலம் குறைக்க முடியும்.

நிருபர்களிடம் பேசிய தமிழக முதல்வர், நிலநடுக்கம் பற்றிய அறிவு தமிழக அரசுக்கு தேவைப்படுவதாகவும், பிரதமரிடம் அது குறித்த தகவல்கள் வேண்டும் எனக் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதிலிருந்தே
இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கு எந்தளவுக்கு இது குறித்த அறிவும், இத்தகைய நிலையில் செயலாற்றும்
திறனும் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இது களையப்பட வேண்டும்.

மாநில அரசும், மய்ய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். மய்ய அரசில் உள்ளது போல மாநில அரசிலும் Crisis Management குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழக அரசின் தலைமைச் செயலகமும், காவல்துறை தலைவர் அலுவலகமும் கூப்பிடு தூரத்தில் இருக்கும் சாலையில் அசம்பாவிதம் நடந்து, பல மணி நேரங்களுக்குப் பிறகு தான் நிவாரணப் பணிகளே முடுக்கி விடப்பட்டுள்ள பொழுது எங்கோ இருக்கும் நாகப்பட்டினத்தின் குக்கிராமங்களில் எப்பொழுது நிவாரணம் முழுஅளவில் போய்ச் சேரும் என்று தெரியவில்லை. மய்ய அரசின் அவசர காலக் குழு இராணுவம், கடற்படை, விமானப்படைகளை முடுக்கி விட்டுள்ளது. நிவாரணங்கள் துரிதமாக நடப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இத்தகைய பெரிய சீற்றங்களில் மாநில அரசுகளுக்கு இருக்கும் வசதிகளும், இயந்திரங்களும் மிகக் குறைவு.

மருத்துவ வசதிகளும் போதுமான அளவில் இல்லை. சென்னையில் அப்பலோ போன்ற தனியார் மருத்துவமனைகள் தங்களது சேவையைச் செய்ய தொடங்கியிருப்பது ஆரோக்கியமாக இருக்கிறது. மாவட்ட தலைநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளும் இத்தகைய சேவையைச் செய்ய முன்வர வேண்டும்.

எதிர்கட்சிகள் மாநில அரசை குற்றம் சாட்டுவதை நிறுத்தி விட்டு தங்களால் முடிந்த மக்களுக்கான சேவையை செய்ய முன்வர வேண்டும். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்திருதாலும் இது தான் அரசு இயந்திரங்களின் லட்சணம்.கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டால் கீழ் மட்டத்தில் உள்ள தொண்டர்களை தூண்டி விட்டு சில மணி நேரங்களில் மாநிலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் அரசியல் கட்சிகள் இத்தகைய தருணத்தில் அரசை சாடிவிட்டு வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்க கூடாது. தங்களது தொண்டர்களைக் கொண்டு மீட்பு நடவடிக்கைகளில் அரசுக்கு உதவி செய்யலாம்.

நடந்து விட்ட அசம்பாவிதத்திலிருந்தாவது நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அசம்பாவிதம் நடந்து சில நாட்களில் அதை மறந்து விடாமல் நீண்டகால தீர்வுக்கு முனைய வேண்டும்.

பச்சிளம் குழந்தைகளின் சடலங்களைப் பார்க்கும் பொழுது எழும் வேதனை இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய சேதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதே ஆயிரக்கணக்கில் பலியாகி விட்ட உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.

மீட்பு நடவடிக்கை

December 26, 2004 at 3:17 am | Posted in வகைப்படுத்தாதவை... | 1 Comment

நில நடுக்கம் ஏற்பட்டு பல மணி நேரங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னமும் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சென்னை மட்டுமில்லாமல், கடலூர், நாகை, கன்னியாகுமரி ஆகிய தமிழக கடலோரப் பகுதிகள் அனைத்தும் பாதிப்புள்ளாகியிருக்கிறது. சென்னையில் 100, கடலூரில் 100 என்று சாவு எண்ணிக்கை அதிகம் உயரும் போல தெரிகிறது. கடலூர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பல மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுந்து உயிர்ச் சேதம் விளைவித்துள்ளது.

ஆனால் இது வரை அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. போலீஸ், மீட்புக் குழு என்று எவரும் அதிக எண்ணிக்கையில் காணப்படவில்லை. மக்கள் தங்களுக்குள்ளாகவே உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். பார்வையிட ஆளுங்கட்சி குழு, எதிர்க்கட்சி குழு என்று மீடியா முன்பு காட்சி தந்து கொண்டிருக்கிறார்கள். தில்லியில் இருந்து தயாநிதி மாறன் வருகிறாராம். வந்து என்ன கிழிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.

தற்பொழுது தேவைப்படுவது இந்த பார்வையிடல்கள் அல்ல. Crisis Management என்ற ஒன்று இருப்பதாக தெரியவில்லை. மாவட்ட ஆட்சி தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ?

தமிழக கடலோர பகுதி நெடுகிலும் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளுக்கு உடனடியாக இராணுவமும், கடற்படையும் ஈடுபடுத்தி மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இன்னமும் இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகத் தான் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இனி மேலும் எதற்கு தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதியில் மருத்துவ வசதிகளும் இல்லை. போலீஸ் எண்ணிக்கையும், மாநில அரசின் குழுவும் தற்பொழுதுள்ள சூழ்நிலையில் போதாது.

பாதிக்கப்பட்ட பகுதிகள் மிக அதிகமாக இருப்பதால் மிக துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகம், ஆந்திரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், ஓரிசா என்று இந்தியாவின் கிழக்கு கடற்கரை முழுவதும் மற்றும் இலங்கைத் தீவிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் விவரம் தெரிய பல நாட்கள் ஆகலாம்.

சென்னையில் நில நடுக்கம்

December 26, 2004 at 1:28 am | Posted in வகைப்படுத்தாதவை... | Leave a comment

சென்னையில் இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் கடலோரப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மெரினா, சாந்தோம் போன்ற கடலோர பகுதியில் கடல் நீர் புகுந்துள்ளது. இது வரை 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. பலரை காணாவில்லை.

சரியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. மெரினா கடற்கரை மற்றும் ரோடுகளில் கடல் நீர் இருப்பதை தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது. கடலூர், நாகை போன்ற இடங்களில் மீனவர் குடியிருப்புகள் பெருத்த சேதம் அடைந்துள்ளதாகவும், பல மீனவர்கள் இறந்திருக்கலாம் என்றும் சன் நியுஸ் தொலைக்காட்சி தெரிவிக்கிறது.

மேலும் இலங்கையில் கூட இதன் பாதிப்பு இருப்பதாகவும் தெரிகிறது

வரலாறு

December 25, 2004 at 3:10 am | Posted in வகைப்படுத்தாதவை... | 2 Comments

வரலாறுக்கென்று ஒரு தனி இணையத் தளம் சில மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழில் உள்ள பல சிறப்பான இணையத் தளங்களின் பட்டியலில் இந்த இணையத் தளமும் சேருவதற்கான அறிகுறி தெரிகிறது.

கமலக்கண்ணன் எழுதும் கட்டடக்கலை ஆய்வு, இலாவண்யாவின் கல்வெட்டாய்வு பற்றிய தொடர்கள் இது வரை எந்த ஊடகங்களிலும் காணப்படாத புது முயற்சி. கட்டடக்கலைப் பற்றிய விளக்கங்கள், படங்களுடன் அளிக்கப்படும் தகவல்கள் மிக சிறப்பாக இருக்கிறது. ஆனால்
கட்டடக்கலைக்கே உரித்தான பல வார்த்தைகளுடன் கட்டுரை அமைந்திருப்பதால் சில இடங்களில் புரிந்து கொள்வது சற்று கடினமாக உள்ளது. கட்டடக்கலைப் பற்றி அதிகம் அறியாத வாசகர்கள் (என்னைப் போல) வாசிப்பதற்கு ஏற்றவாறு நடையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும். அது போலவே கலைக்கோவன் எழுதும் கட்டுரைகள் சிறப்பாக உள்ளது. பல தகவல்களை தெரிந்து
கொள்ள முடிகிறது.

கதைநேரத்தில் கோகுல் எழுதும் இராஜகேசரி வரலாற்றுத் தொடர் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. நடையில் வேகமும், துள்ளலும் இயல்பாக இருக்கிறது. கதாசிரியரின் வர்ணனை திறனுக்கும், சிறப்பான நடைக்கும் எடுத்துக்காட்டாக கதையைப் படிக்கும் பொழுது அக்கால தஞ்சாவூர் கண்களில் விரிவதை செல்லலாம்.

கதையின் ஆரம்பத்தில் உள்ள முன்னுரையில் அக் கால மக்களின் வாழ்க்கை முறைகளை விளக்கப் போவதாக சொல்லப்பட்டாலும், கதையின் போக்கில் அப்படித் தெரியவில்லை. ஒரு சதி அதைச் சுற்றி பின்னப்படும் கதை என்று வழக்கம் போல ஒரு “மசாலா” வரலாற்றுக் கதையாகவே கதையின் போக்கு “இது வரை” தென்படுகிறது.

தற்கால நிகழ்வுகள் கதைக்குள் புகுத்தப்பட்டது போல சில இடங்களில் தெரிகிறது. குறிப்பாக ராஜராஜரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவரை காண வருபவர்களை குறிப்பெடுத்துக் கொள்ளுதல் போன்றவை கதை நிகழும் காலத்தின் இருந்திருக்குமா என்ற ஐயம் எழுகிறது. ஆனாலும் அந்தக்
கற்பனை சிறப்பாகவே உள்ளது.

கல்கியின் பாதிப்பு கோகுலிடம் தேவைக்கு அதிகமாகவே தென்படுவதை தவிர்த்திருக்கலாம். கல்கியின் பாணியில் எழுதுவதற்கு கூட ஆழ்ந்த புலமை தேவை. என்றாலும், தன்னுடைய தனித்தன்மையை கதையில் கொண்டு வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் சில குறைகள் தென்பட்டாலும், மிக சிறப்பான ஒரு வரலாற்று கதையாக இது வெளிவரும் என்பதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் மிக வலுவாகவே உள்ளது.

கட்டடக்கலை மற்றும் அதைச் சார்ந்த இணையத் தளமாக மட்டுமில்லாமல் வரலாற்றின் பிற நிகழ்வுகளான அக் கால மாபெரும் மன்னர்களின் வாழ்க்கை வரலாறு, தமிழிசை, அக் கால மக்களின் வாழ்க்கை முறைகள் போன்றவற்றை பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும். இத்தகைய தகவல்கள் புத்தகமாக கிடைக்கும் என்றாலும், ஒரு தொடராக வெளிவரும் பொழுது படிப்பதற்கு எளிதாக இருக்கும்.

சிறப்பாக எழுதி வரும் வரலாறு இணையத் தள குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்

நரசிம்மராவும் பொருளாதாரமும்

December 24, 2004 at 5:16 am | Posted in வகைப்படுத்தாதவை... | Leave a comment

இன்றிருக்கும் பொருளாதார சூழ்நிலைகளையும், 1991ல் இருந்த சூழ்நிலைகளையும் ஒப்பு நோக்கும் பொழுது நரசிம்மராவ் என்ற கிழவரின் சாதனைகள் புரிபடும். அவரது ஆட்சிக் காலத்தில் விதைக்கப்பட்டவை தான் இன்று வளர்ந்துள்ளது. இந்திய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட நரசிம்மராவ், பொருளாதாரத்தில் பெரிய மேதை இல்லை என்பது தான் அச்சரியமான ஒன்று. பொருளாதாரத்தில் பெரும் புலமை இல்லாத அவர் நாட்டின் பொருளாதாரத்தையே தூக்கி நிறுத்தும் செயல்களை செய்தது நிச்சயம் சாதாரணமானது அன்று.

ராஜிவ் காந்தி போலவோ, வாஜ்பாய் போலவோ கவர்ச்சிகரமான, மக்களை வசிகரிக்கக்கூடிய சக்தி இல்லாத பிரதமர், நமக்கு 1991ல் கிடைத்தது தான் மிகப் பெரிய வரப்பிரசாதம். நாட்டின் பொருளாதார தேவைகளை உணர்ந்து அதற்கு ஏற்ற ஒருவரை தேர்ந்தெடுத்து, அதனால் கிடைக்கும் புகழை பிறருக்கு தாரைவார்க்கும் மனம் நிச்சயமாக ஒரு கவர்ச்சிகரமான பிரதமருக்கு இருந்திருக்காது. ராஜீவ் காந்தி இறக்காமல் இருந்து அவரே பிரதமராக 1991ல் பதவியேற்றிருந்தாலும், இந்த பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்க கூடும்.
ஆனால் அவர் தன்னை முன்னிறுத்தி, நிதித் துறையில் உள்ள பல அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு, பொருளாதாரத்தை நாலாபக்கங்களிலும் இருந்து பலரும் ஆட்டிப்படைக்க மந்தகதியில் பொருளாதாரம் சென்றிருக்கும்.

இமேஜ் இல்லாத பிரதமராக நரசிம்மராவ் கிடைத்ததால் தான் மன்மோகன் சிங்கை முன்னிறுத்தி, சுதந்திரம் அளித்து, பொருளாதார சீர்திருத்த புகழை எல்லாம் அவருக்கு தாரைவார்த்து, முடிக்கிடந்த நாட்டின் பொருளாதார கதவுகளை அகல திறக்க முடிந்தது.

அது போலவே அரசியல் சக்திகளிடமிருந்து மன்மோகன் சிங்கை காப்பாற்றி எந்தளவுக்கு சுதந்திரமாக செயல்பட அனுமதித்தார் என்பது வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின் நடந்த நிகழ்வுகளை நோக்கும் பொழுது புரிபடும். நிதி அமைச்சர், தனியார் மயமாக்க ஒரு அமைச்சர், அவர்களுக்கு உத்தரவு கொடுக்க சுதேசி கோஷத்துடன் சங்பரிவார் என எல்லாவற்றையும் சமாளித்து வாஜ்பாயால் தனது ஆட்சிக் காலத்தின் ஐந்தாவது ஆண்டில் தான் “இந்தியா ஒளிர்கிறது” என்று கோஷமிடமுடிந்தது.

ஆனால் இமேஜ் இல்லாமல், மக்கள் சக்தியும் இல்லாமல் அரசியல் எதிர்ப்புகளை சமாளித்து அவரது ஆட்சிக்காலத்திலேயே பல பொருளாதார சீர்திருத்தங்களை செய்தது அசாத்தியமானது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க இந்திய பொருளாதாரத்தை தாராளமயமாக்கியது, தொழில் தொடங்க இருந்த பல பிரச்சனைகளை களைந்தது என்று அவரின் பொருளாதார சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சொற்ப அந்நிய செலவாணியுடன் இருந்த இந்தியா இன்று 130 பில்லியன் டாலர் அந்நிய செலவாணியுடன் சொகுசாக இருக்கிறது. பங்குச் சந்தை 6000ஐ கடந்து 7000ஐ நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை குவிப்பதாலேயே இது சாத்தியமாகிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது நரசிம்மராவின் ஆட்சியில் தான்.

உலகத்தரத்துடன் மிக நவீனமயமாக்கப்பட்ட, முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட, நாடெங்கிலும் பல்வேறு மையங்களிலும் எளிதில் பங்கு வர்த்தகம் செய்யக் கூடிய தேசிய பங்குச் சந்தை தொடங்கப்பட்டதும் நரசிம்மராவின் ஆட்சியில் தான்.

நரசிம்மராவ் – பங்குச் சந்தை என்றவுடன் ஹர்ஷத் மேத்தா வின் ஊழல் நினைவுக்கு வரும். சீர்திருத்தங்கள் செய்யும் பொழுது சில ஓட்டைகள் அடைக்கப்படாமல் போவது சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் போய் விடும். ஏதாவது பிரச்சனை வந்தால் தான் அந்த ஓட்டைகள் வெளிவரும். பின் ஓட்டைகள் அடைக்கப்படும். ஹர்ஷத் மேத்தா ஓட்டையை பயன்படுத்திக் கொண்ட புத்திசாலி. அவ்வளவு தான். அப்பொழுது நடக்காமல் போய் இருந்தால் பின் எப்பொழுதாவது நடந்திருக்கும். அந்த ஊழல் மூலம் ஓட்டைகள் அடைக்கப்பட்டு சரியான அளவிலான கண்காணிப்புடன் இன்று பங்குச் சந்தை செயல்படுகிறது.

மற்ற எந்த பிரதமர்களைக் காட்டிலும் இந்தியாவின் பொருளாதார மேன்மைக்காக வித்திட்ட பிரதமர் நரசிம்மராவ் தான். இன்னும் 50 வருடத்திற்க்குப் பிறகு இந்தியா பொருளாதார வல்லரசாகும் பொழுது அதற்கு விதை விதைத்தவர் ஒரு எழுபது வயது கிழவர் என்பதை அனைவரும் மறக்காமல் இருந்தால், அவரது அத்மா அமைதி அடையும்.

பத்ரியின் இரங்கல் : பிரகாஷின் Obituary

உலக அதிசயங்களுக்கான தேர்தல்

December 18, 2004 at 9:28 am | Posted in வகைப்படுத்தாதவை... | 2 Comments

இதைப் பற்றி கேள்விபட்டவுடன் எனக்கு எழுந்த முதல் கேள்வி “தஞ்சாவூர் பெரிய கோயில்” ஏன் இந்தப் பட்டியலில் இல்லை ? மதுரை மீனாட்சியம்மன் கோயில் எந்தவிதத்தில் அதிசயமானது ?

இப்பொழுது ஒரு புதுப்பட்டியல் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் தமிழகத்தில் இருந்து எழு இடங்கள் இடம்பெற்றுள்ளன.

  1. மதுரை மீனாட்சியம்மன் கோயில்
  2. தஞ்சாவூர் பெரிய கோயில்
  3. மகாபலிபுரம்
  4. கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை
  5. கன்னியாகுமரி விவேகானந்தா நினைவு மண்டபம்
  6. திருவண்ணாமலை கோயில்
  7. சென்னை அண்ணாநகர் டவர்

இந்தப் பட்டியலில் அண்ணா நகர் டவரைப் பார்த்தவுடன் சிரிப்பு தான் வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறக் கூடிய அளவுக்கு அண்ணாநகர் டவர் எந்த வகையில் அதிசயமானது என்பது தெரியவில்லை.

இந்தப் பட்டியலில் இடம்பெறக் கூடிய கட்டடங்களை யார் தேர்வு செய்கிறார்கள் ? மற்ற நாடுகளில் உள்ள கட்டிடங்களும் இந்த லட்சனத்தில் தான் இருக்குமோ ?

இதற்கு ஒரு தேர்தலாம் ? ஓட்டெடுப்பாம் ?

ஆந்திரா திருமணங்களும், வரதட்சணையும்

December 10, 2004 at 7:34 am | Posted in வகைப்படுத்தாதவை... | 3 Comments

சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த நண்பன் ஒருவனின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். நண்பன் அமெரிக்காவில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். வரதட்சணை மட்டும் சுமார் 50 இலட்சம் கிடைத்திருக்கிறதாம். ஆந்திரா திருமணங்களில் வரதட்சணை படுத்தும் பாடு, படு மோசம். அந்திராவில் பெண் பெற்றவர்கள் பாடு படு திண்டாட்டம் தான் போலும். என்னுடைய பல ஆந்திரா நண்பர்கள் வரதட்சணை என்று பல லகரங்களைப் பெற்ற கதை எனக்குத் தெரியும். இதில் வினோதம் என்னவென்றால், எனக்கு வரதட்சணை அதிகமாக வேண்டும், அதனால் தான் இந்த மென்பொருள் துறைக்கே வந்துள்ளேன் என பலர் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். ஓவ்வொருவரின் தகுதிக்கு ஏற்றாற்ப் போல வரதட்சணை மாறுபடும். அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றால் தனி ரேட், இந்தியாவில் பெரிய கம்பெனியில் இருந்தால் தனி ரேட், சின்ன கம்பெனிக்கு ஒரு ரேட் என்று விலைப் போய் கொண்டிருக்கிறார்கள்.

வரதட்சணை என்றாலே என்னுடைய நிறுவனத்தில் வேலைச் செய்யும் அந்திராவைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் ஞாபகம் கட்டாயம் வந்துப் போகும். நண்பருக்கு திருமணம் நிச்சயம் ஆகும் சூழ்நிலை. பெண் பார்த்து எல்லாம் பேசி முடிவாகி விட்டது. 20 இலட்சம் வரதட்சணை என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டு திரிந்தார். திடீரென்று அவருக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்கா சென்றால் நிறைய வரதட்சணை கிடைக்கும் என்ற ஆசையில் அந்தப் பெண்ணை வேண்டாம் என்று சொல்லி விட்டார். அவர் நேரம் அவருடைய ப்ராஜக்ட் சொதப்பலாகி அமெரிக்கா வாய்ப்பு பறிபோய் விட்டது. இன்னமும் சென்னையில் தான் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார். கல்யாணமும் ஆன பாடில்லை. வயதும் 30ஐ தாண்டி கடந்து கொண்டே இருக்கிறது. தனது அந்தஸ்துக்கு ஏற்ற வரதட்சணையை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அவர் பெரும் சம்பளத்திற்கு இந்த அலைச்சல் தேவை இல்லை தான். ஆனால் குறைவாக வரதட்சணை பெற்றால் தன் உறவினர்கள் மத்தியில் தன் அந்தஸ்து குறைந்து விடும் என்று அஞ்சுகிறார். கீழ்மட்டத்தில் வரதட்சணை எந்தளவுக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் என் அலுவலகத்தைப் பொறுத்தமட்டில் மேல் சாதியினராக கருதப்படும் ரெட்டி போன்ற சாதிகளில் வரதட்சணை பல இலகரங்கள் தான்.

படித்த நல்ல வேளையில் இருக்கும் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களுக்கும் அந்திரா இளைஞர்களுக்கும் இந்த விஷயத்தில் நிறைய வேறுபாடு உள்ளது. எல்லா இடத்திலும் சிலர் வரதட்சணைப் பெற்று கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் பெருவாரியான படித்த இளைஞர்கள் இவ்வாறு இல்லை என்றே நான் கருதுகிறேன். அப்படியே வாங்கினாலும் அதை பெருமைக்குரிய செயலாக நினைக்காமல் ஒரு குற்ற உணர்ச்சியுடன், தான் வரதட்சணை வாங்கியதை வெளியே சொல்லாமல் அமுக்கி விடுவார்கள். வரதட்சணை வாங்குவது நம்முடைய தமிழ் சமுதாயத்தில் அவ்வளவு கேவலமான விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் ஆந்திராவிலோ எவ்வளவு வரதட்சணை பெறுகிறோமோ அந்தளவுக்கு தம்முடைய அந்தஸ்து உயருவதாகவே கருதுகின்றனர். வெளிப்படையாக தனக்கு இவ்வளவு வரதட்சணை கிடைக்கிறது, வரதட்சணை அதிகமாக பெறுவதற்குத் தான் அமெரிக்கா செல்ல நினைக்கிறேன் என்று தப்பட்டம் அடிக்கின்றனர்.

அந்திரா உணவு போல திருமணமும் காரமான விஷயம் தான். ஆனால் அது பெண் வீட்டாருக்கு மட்டும் தான் காரமாக தெரிகிறது.

Blog at WordPress.com.
Entries and comments feeds.