தீபத் திருநாள்

November 27, 2004 at 8:19 am | Posted in வகைப்படுத்தாதவை... | Leave a comment

சின்ன சின்ன விளக்குகள் ஒளிவீசும் அழகிய திருநாள், கார்த்திகை திருநாள். எல்லா வீடுகளிலும் தோன்றும் இந்த தீப ஒளி கண்கொள்ளா காட்சி. என் சிறிய வயதில் தீபாவளி, பொங்களுக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த கொண்டாட்டம் இந்த கார்த்திகை திருநாள் தான். ஊர் அழகாக இருக்கிறது என்பதற்காக அல்ல. கார்த்திகையின் போது கார்த்தி சுற்றுதல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

நான்கு கட்டைகளை வைத்துக் கட்டி அதன் அடியில் ஒரு துணியில் அடுப்பு கரி வைத்து, கட்டையின் முனையில் கயிறு கட்டி, அடுப்பு கரியை கொளுத்தி, கயிறு பிடித்து தலைக்கு மேலே சுற்ற வேண்டும். எங்கள் பகுதியில் இதைக் கார்த்தி சுற்றுதல் என்று தான் சொல்வார்கள். மற்ற பகுதியில் என்ன பெயர் என்பது தெரியவில்லை. கார்த்தி சுற்றும் பொழுது கொட்டும் பூ போன்ற நெருப்பு பொறி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். யார் கார்த்தியில் அதிக பூ கொட்டுகிறது என்ற போட்டி கூட சிறுவர்கள் மத்தியில் நடக்கும். அடுப்பு கரியை விட, பனை மரத்தின் பூவைக் கொண்டு கார்த்தி சுற்றும் பொழுது பூ அதிகமாக விழும். பார்க்க மிக அழகாக இருக்கும்.

எங்கள் பகுதியில் பனை மரமெல்லாம் கிடையாது. சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராமங்களில் தான் பனைமரம் இருக்கும். பனை மரம் ஏறும் தெம்பெல்லாம் எனக்கு இருந்தது கிடையாது. என்னுடன் இருக்கும் சில சிறுவர்களின் கார்த்தியில் அழகாக பூ கொட்டுவதை பொறாமையுடன் பார்ப்பேன். என்னுடைய ஏக்கத்தைப் பார்த்து விட்டு யாரோ ஒரு உறவினர் மூலம் என் பாட்டி ஒரு வருடம் பனை மரத்தின் பூவை தருவித்து கொடுத்தார்.

பனை மரத்தின் பூவை நன்றாக சுட வேண்டும். ஒரு குழி தோண்டி அதில் பனை மரத்தின் பூவைக் கொட்டி சுட வேண்டும். சரியான பதம் வந்தவுடன் அதனை கார்த்தியில் வைத்து, நெருப்பு பற்ற வைத்து சுற்ற வேண்டும். அதில் கொட்டும் பூ பார்பதற்கே அழகாக இருக்கும். எங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் மைதானத்தில் எல்லா சிறுவர்களும் தங்கள் கார்த்தியுடன் கூடி சுற்றுவார்கள். மூன்று நாட்கள் நடக்கும் இந்த சுற்றல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மூன்றாம் நாள் கார்த்தி சுற்றி விட்டு தூர எறிந்து விட்டு வருவோம். ஒவ்வொரு பண்டிகைக்கும் தான் எத்தனை விதமான தனிச் சிறப்பு. கொண்டாட்டம்.

சென்னைக்கு வந்தப் பிறகு வெறும் அகல் விளக்குடன் பண்டிகை நிறைவு பெற்று விடுகிறது. இன்னும் கூட கிராமங்களில் கார்த்தி சுற்றி கொண்டு தான் இருக்கிறார்கள். நகரத்தில் பிறக்கப் போகும் என் பிள்ளைகளுக்கு இந்த கொண்டாட்டம் இருக்காது என்று நினைக்கும் பொழுது வருத்தமாகத் தான் இருக்கிறது.

Leave a Comment »

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.
Entries and comments feeds.