சுனாமி : பொருளாதார பாதிப்புகள்

December 30, 2004 at 11:47 am | Posted in வகைப்படுத்தாதவை... | Leave a comment

பல்லாயிரம் பேரின் உயிரைப் பலி கொண்ட சுனாமி, ஆசியாவில் சுமார் 14 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளின் சுற்றுலாத் துறைக்கு கடும் சேதத்தை விளைவித்து விட்டது. இலங்கை, மாலத்தீவுகள் போன்ற நாடுகளின் பொருளாதாரம் சுனாமியால், வரும் நாட்களில் கடும் சோதனைகளை எதிர் கொள்ளும். ஆனால் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தான் பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

பல ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போர்களுக்குப் பிறகு, விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட போர் நிறுத்தத்திற்குப் பிறகு தான் இலங்கைப் பொருளாதாரம் முன்னேறத் தொடங்கியது. சமீப காலங்களில் தான் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இலங்கைக்கு வரத் தொடங்கியிருந்தனர். இனி அவர்களது வரவு குறைந்துப் போகக் கூடும். சுற்றுலாத் துறையை பெரிது நம்பி இருக்கும் இலங்கைக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். சுற்றுலாத் தளங்களான கடற்கரை ரிசார்டுகள், சின்னாபின்னமாகி விட்ட சாலைகள், ரயில் போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்றவை சரி செய்யப்பட ஏராளமான நிதி, கால அவகாசம் தேவைப்படுகிறது. சுனாமி, இலங்கைப் பொருளாதார வளர்ச்சியை சில வருடங்கள் பின்நேக்கி தள்ளக் கூடும்.

இலங்கையின் மற்றொரு முக்கிய ஏற்றுமதி தொழில், ஜவுளி. 2005ம் ஆண்டில் இருந்து ஜவுளித் துறையில் கோட்டா முறை விலக்கப்படுகிறது. ஜவுளித் துறையில் வளர்ச்சி அடைந்து விட்ட இந்தியா, சீனா போன்ற நாடுகளின் கடும் ஏற்றுமதி போட்டியை இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இலங்கைப் பொருளாதாரத்திற்கு விடுக்கப்பட்ட இந்த சவால் போதாதென்று இப்பொழுது சுனாமி வேறு சேதம் விளைவித்து விட்டது.

சுற்றுலாத் துறையை நம்பியிருக்கும் மற்றொரு நாடான மாலத் தீவிலும் இதே நிலைமை தான். மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சியே சுற்றுலாத் துறையை நம்பி தான் உள்ளது. அந் நாட்டிற்கு கிடைக்கும் அந்நியசெலவாணியில் அரைப் பங்கு சுற்றுலாப் பயணிகள் மூலம் தான் வருகிறது. சுனாமி அந் நாட்டு பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.

இந்தியாவைப் பொறுத்த வரை சுனமியால் சுமார் 5000 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மீன்பிடித் தொழில், சுற்றுலா, கப்பல் போக்குவரத்து போன்றவை அதிகம் பாதிப்புக்குள்ளாகும். வெளிநாட்டுக்கு அதிகம் ஏற்மதியாகும் இறால், மற்றும் மீனவர் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சுமாராக 2000 கோடி இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. சமீப காலங்களில் தான் கப்பல் போக்குவரத்து, ஹோட்டல் தொழில் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது. சுனாமி அனைத்தையும் சிதைத்து விட்டது. இன்று கூட பங்குச் சந்தையில் ஹோட்டல்
பங்குகள், கப்பல் நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவுற்றுள்ளது. ஆனால் இந்தத் துறைகள் எல்லாம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்க கூடியவை அல்ல. அதனால் இந்திய பொருளாதாரம் இந்த இழப்புகளை தாங்கிக் கொள்ளும். சில மாதங்களில் இந் நிலைமை சரியாகிவிடும் என்றே எதிர்பர்க்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக புனர்வாழ்வு அமைத்து தருவது தான் தற்போதைய பெரிய சவால். தற்போதைய நிலவரப் படி சுமார் இரண்டாயிரம் கோடி இதற்காகத் தேவைப்படும். வருமான வரியில் கல்விக்காக விதிக்கப்படும் செஸ் (cess) வரிப் போல நிவாரணப் பணிக்காக 1% செஸ் வரி விதிக்கப் படும் சாத்தியக் கூறுகள்
உள்ளது. இதன் மூலம் சுமார் 1400 கோடியை திரட்ட முடியும். இது மட்டுமின்றி பல நிறுவனங்களும், மக்களும் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து கொண்டே இருக்கின்றனர். இதிலும் கணிசமாக நிதி திரட்ட முடியும்.

இந்தியா, குஜராத் போன்ற பூகம்ப காலங்களில் எப்படி வெளிநாட்டு உதவி தேவையில்லை என்று கூறி வந்ததோ அது போலவே இம்முறையும் வெளிநாட்டினரின் உதவி தேவையில்லை என்று உறுதியாக தெரிவித்து விட்டது. இந்தியாவால் இந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியும் என்று பிரதமர் மன்மோகன் சிங் இன்று மறுபடியும் தெரிவித்தார். நம் தேவையை நாமே கவனித்து கொள்கிற அதே நேரத்தில் இலங்கைக்கு ஏராளமான உதவியை இந்தியா செய்து கொண்டிருக்கிறது. சுமார் 100 கோடி இலங்கைக்கு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது (நமக்கு இதைக் கேட்டால் வேதனை தான் ஏற்படுகிறது. நம்முடைய வரிப்பணம் இலங்கையில் உள்ள நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு உதவாமல் யாருக்கோ போகிறது )

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுலப கடன் திட்டமும், ஏற்கனவே கடன் வாங்கியுள்ளவர்களுக்கு கடன் காலத்தை நீட்டிக்கவும், காப்பீடு செய்தவர்களுக்கு காலதாமதம் செய்யாமல் உடனடியாக காப்பீட்டு தொகை வழங்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொழில் சார்ந்த கட்டுமானங்களான கடலில் இருந்த ONGC யின் எண்ணெய் கிணறுகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. ஆனால் சென்னைக்கு வந்த கப்பலின் கண்டெய்னரில் இருந்த 1200 ஹுண்டாய் கார்களில் நீர்
புகுந்துள்ளது. பிரேசிலில் இருந்த வந்த சக்கரையும் கடல் கொந்தளிப்பால் கரைந்துப் போனதில் சில கோடி ரூபாய் இழப்பு ஏற்படக்கூடும். 4 கப்பல்கள் சுனாமியில் சேதமானதில் கப்பல் துறைக்கு சுமார் 200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்தத்தில் 5000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டு இருந்தாலும் சமீப காலமாக எழுச்சியடைந்து வரும் இந்தியாவின் பொருளாதாரமும் இதனை தாங்கிக் கொள்ளும்.

Leave a Comment »

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Create a free website or blog at WordPress.com.
Entries and comments feeds.