சதுரங்க ஆட்டத்தில் “தமிழீழம்” – 5

July 3, 2006 at 11:45 pm | Posted in வகைப்படுத்தாதவை... | 1 Comment

கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் நடந்து வரும் சண்டைகளுக்கு புலிகள் மீது கருணா குழு என்ற பெயரில் இராணுவமும், இராணுவம் மீது பொங்கு தமிழ்ப் படை என்ற பெயரில் புலிகளும் மறைமுகமாக தொடுக்கும் தாக்குதல் ஒரு முக்கிய காரணம். இரு பிரிவுகளின் உளவுப்படையினர் கடும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் தான் புலிகள் மீதான கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் தடை விதித்தன. கனடாவின் தடை எதிர்பார்த்த ஒன்று என்பதால் அது ஆச்சரியம் அளிக்க வில்லை. ஐரோப்பிய யூனியன் தடை விதிக்கக் கூடும் என கடந்த காலங்களில் எச்சரிக்கை மற்றும் நிர்பந்தங்களை வெளியிட்டு இருந்தாலும், ஐரோப்பிய யூனியன் தடை விதிக்க கூடும் என்ற நிலை இருந்தாலும், ஒரு சில நாட்களில் திடீர் என எடுத்த முடிவு ஆச்சரியப்படுத்தியது. லஷ்மன் கதிர்காமர் படுகொலை சமயத்தில் பயணத் தடை விதித்தப் பிறகு ஐரோப்பிய யூனியன் ஓரளவிற்கு நடுநிலைமையாகவே இந்தப் பிரச்சனையை அணுகி வந்துள்ளது.

சிறீலங்கா இராணுவத் தளபதி போன்ஸ்கா மீதான தற்கொலை தாக்குதலுக்குப் பிறகு கூட ஐரோப்பிய யூனியன் புலிகள் மீது தடையினை விதிக்க ஆர்வம் காட்டவில்லை (இது நடந்தது ஏப்ரல் 25ம் தேதி). புலிகளின் தளபதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் காரணமாக எழுந்த இந்த பதிலடியை ஐரோப்பிய யூனியன் தடை செய்யத்தக்க அளவில் அணுகவில்லை.

பொதுவாகவே நார்வே போன்ற நாடுகளுக்கு உலகின் பல நாடுகளில் நடக்கும் பிரச்சனைகளில் அணுசரணையாளராக இருப்பதற்கு ஆர்வம் அதிகம். இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனை, இலங்கைப் பிரச்சனை மற்றும் பல்வேறு நாடுகளின் பிரச்சனைகளில் தொடர்ச்சியாக நார்வே பல அணுசரணை முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாய் உலக நாடுகளின் பல்வேறு பிரச்சனைகளில் ஒரு முக்கியமான நாடாக தன்னை மாற்றிக் கொள்ள நார்வே முயற்சி செய்து வந்துள்ளது. இதன் மூலம் உலக அரங்கில் தனது முக்கியத்துவத்தை நிலை நிறுத்துவது நார்வேயின் நோக்கம். பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்துள்ள நார்வே, இதற்காக தனது நாட்டின் GDPல் (உள்நாட்டு மொத்த உற்பத்தி) ஒரு சதவீதத்தை (1%) இத்தகைய பல்வேறு நதி உதவிகளுக்கு பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் தான் புலிகளுக்கும் நிறைய நிதி உதவிகளை நார்வே அளித்துள்ளது. உலகின் பிற நாடுகளுக்கும் தொடர்ந்து செய்து வருகிறது. (இது குறித்து ஹிந்து பத்திரிக்கையில் எழுந்த விமர்சனத்தை உங்களின் சார்புகளுக்கு ஏற்ப யூகப்படுத்திக் கொள்ளலாம்). உலகிலேயே தன்னுடைய உள்நாட்டு உற்பத்தி அளவில் அதிக நிதியுதவி செய்யும் ஒரே நாடு நார்வே தான்.

நார்வே, சமாதானத்திற்கு மட்டுமில்லாமல், தன்னுடைய சுயதேவைகளுக்காகவுமே இலங்கையின் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் பிரச்சனையில் ஒரு தீர்வு ஏற்படும் பட்சத்தில் நார்வே உலக அரங்கில் இத்தகையப் பிரச்சனைகளில் ஏற்கனவே தனக்கு இருக்கும் ஒரு முக்கியமான நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும்.

நார்வேயின் இத்தகைய முயற்சிகளை முன் உதாரணமாகக் கொண்டு, உலக அரங்கில் தங்களின் ஈடுபாட்டை அதிகரித்துக் கொள்ள மேலும் சில நாடுகளும் முயற்சி எடுத்து வருகின்றன. முக்கியமாக ஸ்விட்சர்லாந்து, மற்றும் பிற நார்டிக் நாடுகளான (Nordic countries) ஸ்வீடன், டென்மார்க் போன்றவையும் இத்தகைய முயற்சிகளில் ஆர்வம் காட்டுகின்றன.

இவை தவிர ஜப்பானுக்கு இத்தகைய நோக்கத்துடனும், பொருளாதார தேவைகளுக்காகவும் இந்தப் பிரச்சனையில் தன்னையும் ஒரு அணுசரனையாளராக இணைத்துக் கொள்ளும் ஆர்வம் உண்டு. ஜப்பான் தன்னிச்சையாக இதற்கு சில முயற்சிகளை மேற்க்கொண்ட நிலையில் ஜப்பானின் பிரதிநிதி பிரபாகரனை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் புலிகள் இதனை நிராகரித்து விட்டனர். இவை தவிர நியுசிலாந்து போன்ற நாடுகளும் இத்தகைய பிரச்சனைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வம் கொண்டுள்ளன.

இராணுவ ரீதியில் தங்களுக்கென ஒரு பலத்தை நிறுவிக் கொள்வதன் மூலம் உலக அரங்கில் தங்களை ஒரு வல்லரசாக நிறுவிக் கொள்வதில் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு ஆர்வம் இருப்பது போல இராணுவ பலத்தை பெற முடியாமல் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நிலையில் உலக அரங்கில் வேறு வகையில் தங்களுக்கு ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொள்வது சிறு நாடுகளுக்கு ஆர்வமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தான் உலகெங்கிலும் பல நாடுகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு சமாதான அணுசரனையாளராக தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் சில நாடுகளுக்கு ஆர்வம் உள்ளது.

அந்த ஆர்வத்தை ஐரோப்பிய யூனியன் தடையிலும் புலிகள் பயன்படுத்திக் கொண்டனர்.

அது குறித்தும், ஐரோப்பிய யூனியன் தடையின் பிண்ணனி காரணங்கள் குறித்தும் அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்

(தொடரும்)

Tags


1 Comment »

RSS feed for comments on this post. TrackBack URI

  1. That’s an interseting post and article. I’ve done some work in Europe (Western and Eastern) and it seems that the Eastern side (Moscow) actually has some of that innovation and drive. Certainly there were parts that seemed more dark and closed, but by and large I was impressed with the vigor there vs Western Europe. It would be interesting to see how these rules apply in the Eastern European countries now coming into their own (and if joing the EU perhaps stifles them. Come on http://tropaadet.dk/spencehendricks67608190


Leave a comment

Create a free website or blog at WordPress.com.
Entries and comments feeds.